செய்திகள்

சென்னையில் வேகக்கட்டுப்பாடு இன்றுமுதல் அமல்

இருசக்கர வாகனம், பேருந்து 50 கிலோ மீட்டர்; கார் உள்பட சிறிய ரக வாகனம் 60 கி.மீ வேகம்

குடியிருப்பு பகுதிகளில் 30 கி. மீ. வேகம் மட்டுமே

சென்னை, நவ. 4–

சென்னையில் வாகனங்களுக்கான புதிய வேகக்கட்டுப்பாடு இன்று முதல் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் சுமாா் 62.5 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 6 சதவிகித வாகனங்கள் அதிகரிக்கின்றன. இதன் விளைவாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை முற்றிலும் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்தன. இதைக் கருத்தில் கொண்டு 30 நவீன ‘ஸ்பீடு ரேடார் கன்’ கருவிகள் நகரின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டன.

எவ்வளவு வேகம் செல்லலாம்?

2003 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வேகவரம்பு கடந்த ஜூன் மாதம்தான் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி சென்னையில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் 40 கி.மீ. வேகத்தைத் தாண்டியும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கி.மீ. வேகத்தைத் தாண்டியும் வாகனங்களை ஓட்டிச் சென்றால் வழக்குப் பதியப்பட்டு வந்தது.

இதற்கு வாகன ஓட்டிகள் இடையில் எதிர்ப்பு எழுந்ததால், இந்த உத்தரவை போக்குவரத்து போலீசார் அமல்படுத்தவில்லை. இந்த நிலையில் வாகன வேக வரம்பை மறுமதிப்பீடு செய்து புதிய வேக வரம்பை நிர்ணயம் செய்வதற்காக போக்குவரத்து துறை கூடுதல் கமிஷனர் தலைமையில் அமைக்கப்பட்ட 6 அதிகாரிகள் அடங்கிய குழு அறிக்கை அளித்தது.

அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ. வேகத்திலும், அதேபோல் பேருந்து, லாரி, டிரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மணிக்கு 50 கி.மீ. வேகத்திலும், கார், மினி வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும், ஆட்டோக்கள் மணிக்கு 40 கி.மீ. வேகத்திலும் செல்லலாம். அதேவேளையில் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீ வேகத்தில் மட்டும் செல்லலாம். இந்த வேகக்கட்டுப்பாடு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த வேகக்கட்டுப்பாட்டை மீறும் வாகன ஓட்டிகளுக்கு மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *