செய்திகள் நாடும் நடப்பும்

சென்னைக்கு மெருகூட்ட வரும் விரிவான மெட்ரோ ரெயில் திட்டங்கள்


நாடும் நடப்பும்


வளர்ந்து வரும் சென்னையின் அதிமுக்கிய சிக்கல் போக்குவரத்து நெரிசல்கள்! பல மணி நேரம் ஒரே இடத்தில் நிற்கும் நிலை ஒரு சில இடங்களில் மட்டுமே இதுரை கண்ட சென்னை பெருநகர் அடுத்த 5 ஆண்டுகளில் எதிர்பார்க்கும் ஜனத்தொகை வளர்ச்சிகளுக்கு தயாராகி விட்டதா? என்பது கேள்விக் குறியே!

ஆனால் மெட்ரோ ரெயில் சேவைகளின் விரிவாக்கம் போக்குவரத்து நெரிசல்களுக்கு ஓரளவு தீர்வைத் தரத்தான் செய்கிறது.

தற்சமயம் விமான நிலையத்திற்கு வடசென்னையின் கடைக்கோடி பகுதியான விம்கோ நகரிலிருந்து விமான நிலையம் செல்ல ஒரு மணி நேர பயணம் மட்டுமே, அதுவும் குளுகுளு வசதியுடன் என்பதால் பல இளைஞர்கள் மெட்ரோ ரெயிலில் விமான நிலையம் செல்வது வாடிக்கையாகி விட்டது.

அது போன்றே ரெயில் நிலையங்களுக்கும் செல்ல வசதியான ஒன்றாக இருக்கிறது. ஆனால் பெட்டிகளையும் சிறுவர்களையும் அல்லது தள்ளு வண்டியில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் முதியவர்களுக்கும் ஏதுவாகயில்லை என்பதை மறந்து விடக்கூடாது.

அலுவலகம் செல்வோர், சென்னை நகரை சுற்றிப் பார்க்க விரும்புவோருக்கு வசதிகள் உரிய வகையில் இருக்கிறது.

ஆனால் பெட்டி சுமையை எடுத்துச் செல்லும்போது அதை விமான நிலைய மெட்ரோ நிறுத்தத்தில் நடைமேடையில் இருந்து லிஃப்டில் உபயோகப்படுத்த வழியிருந்தும் பெட்டிகளை டிராலியில் வைத்து எடுத்துச் செல்லவே முடியாது.

மேலும் விமான நிலையத்தில் உள்ள நகரும் நடைபாதைகளில் சென்றால் சமாளித்து விடலாம் என்று ஆவலுடன் செல்பவர்களுக்கு அதிர்ச்சியாய் அந்த நகரும் படிகட்டுகளில் நுழையும்போது நாம் கனமான பெட்டியை தலையில் தூக்கி நகரும் படிகளில் வைக்க மட்டுமே வசதி இருக்கிறது.

ஏன் அந்த சிறு தூண்கள் கொண்டு தடுப்புகள் நகரும் படிகட்டுகளுக்கு நுழையும் இடங்களிலும் வெளியேறும் இடங்களிலும் அமைத்திருக்கிறார்கள்? பெட்டிகளையோ, சுமையான சாமான்களையோ கொண்டு வரக்கூடாது என்பதற்காக என்றால் பயணிகள் தானே உபயோகிப்பார்கள், அவர்களுக்கு ஏன் அப்படி ஒரு தடை, அல்லது இடைஞ்சல்!

இப்படி சிறு சங்கதிகள் நிவர்த்தி ஆகி விட்டால் சென்னையின் மெட்ரோ ரெயில் சேவை இம்மாநகரத்தின் மதிப்பூட்டலாக உயரும்.

இன்று பல பகுதிகளில் பிரதான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்திருப்பதற்கு முக்கிய காரணம் மெட்ரோ ரெயில் நிர்மானிப்பு பயணிகள் நடைபெறுவதால் என்பதை அறிவோம்.

ராயப்பேட்டை சாலையில், பழைய ஜம்மி பில்டிங் பகுதியில் உருவான நீண்ட சாலை போக்குவரத்துப் பாலம் ஒரு பகுதியே இடிக்கப்பட்டுள்ளது. காரணம் அங்கே பூமிக்கடியில் போடப்படும் மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதைகளுக்காக தான். அங்கிருந்த மின்வாரிய கட்டிடமும், மின்சார விநியோக கட்டமைப்பும் பிரித்தெடுக்கப்பட்டு விட்டது. அங்கு தான் ரெயில் நிலையம் வரப்போகிறது.

இப்படி பல லட்சம் கோடி முதலீடுகளில் உருவாகும் மெட்ரோ ரெயில் சேவை அடுத்த 10 ஆண்டுகளில் நவீன சென்னையின் அடையாளமாக மாற இன்று மத்திய – மாநில அரசுகள் நல்லத் திட்டங்களை பொதுமக்களின் வசதிக்காக உருவாக்கிட வேண்டும்.

குறிப்பாக விமான நிலையங்களுக்கு வருவோர் எடுத்து வரும் பெட்டிகளை பாதுகாப்பாக கையாள ஏர்லைன்ஸ் மற்றும் உலகப் புகழ் டிஎஸ்ஏ அமைப்புகளுடன் ஆலோசித்து குறிப்பிட்ட மெட்ரோ நிலையங்களில் விமான பயணிகளின் பெட்டிகள் கையாளப்பட வழி கண்டாக வேண்டும்.

அடுத்த 5 ஆண்டுகளில் அதாவது 2030 க்குள் பல புதுப்புது வழித்தடங்களில் ஓடி இருக்கும் மெட்ரோ ரெயில் சேவைகள் பயணிகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் கட்டுமானமாக உயர்த்திட வழி கண்டாக வேண்டும்.

தற்சமயம் கோடம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரெயில் நிர்மானிப்பு பணிகள் நடைபெற்று வரும் வேகத்தை பார்த்தால் இங்கிருந்து பூந்தமல்லி வரை சேவைகள் அடுத்த ஆண்டில் துவங்கி விடலாம்.

அதாவது கோடம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை செல்வது மட்டுமின்றி வடபழனியில் நடைமேடை மாறினால் தற்போதைய விமான நிலையம் முதல் தண்டையார்பேட்டை வரையான வழித்தடத்திலும் பயணிக்கலாம்.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி – பரந்துார் வரையும், ஆவடி கோயம்பேடு வரையும் நீட்டிப்புக்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் 3 வழித் தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்டமாக கோயம்பேடு – ஆவடி நீட்டிப்பு திட்டத்தில் பாடி புதூர் நகர், பார்க்ரோடு, கோல்டன் பிளாட், அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் உட்பட 15 மெட்ரோ ரயில் நிலையங்கள் சாத்தியக் கூறு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. பூந்தமல்லி – பரந்தூர் நீட்டிப்புத் திட்டத்தில் நசரத் பேட்டை, செம்பரம்பாக்கம், பாப்பான்சத்திரம், இருங்காட்டுக்கோட்டை, திருப்பெரும்புதூர் உட்பட 14 மெட்ரோ ரெயில் நிலையங்கள் சாத்தியக் கூறு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

விரைவில் வெளியிடப்படயிருக்கும் திட்ட அறிக்கையில் விரிவான திட்ட அறிக்கையில், மேம்பால பாதை, சுரங்கப் பாதை வழித் தடங்கள், ரெயில் நிலையங்கள், திட்ட மதிப்பீடு உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும்.

இப்படிப்பட்ட மெகா திட்டத்தில், ரெயில், விமான மற்றும் தொலைதூரப் பஸ்களில் பயணிப்போருக்கும் தேவையான வசதிகளை கொண்டு வருவது பற்றியும் சிந்தித்து செயல் வடிவம் தர வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *