செய்திகள்

தேர்தல் ஆணைய விளம்பர தூதராக இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நியமனம்

தேர்தல் கமிஷனர் முன்னிலையில் ஒப்பந்தம்

டெல்லி, அக். 27–

தேர்தல் ஆணைய விளம்பர தூதராக பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களை தேர்தல் விழிப்புணர்வின் அடையாள சின்னமாக (விளம்பர தூதர்) இந்திய தேர்தல் கமிஷன் அவ்வப்போது நியமிக்கிறது. இந்த நியமனங்கள் தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் நடைபெறும்.

தேசிய அளவில் விழிப்புணர்வு அடையாள சின்னங்களாக கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி, நடிகர் அமீர்கான், சமூக சேவகி நிருகுமார், பாடகர் ஜஸ்பீர் ஜசி ஆகியோர் இதற்கு முன்பு நியமிக்கப்பட்டு உள்ளனர். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த ஆகஸ்டு மாதம் நியமிக்கப்பட்டார்.

இந்தி நடிகர் நியமனம்

இதுபோல தமிழ்நாட்டின் தேர்தல் விளம்பர தூதர்களாக நடிகர்கள் நிழல்கள் ரவி, ரோபோ சங்கர், பாடகி சித்ரா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு இருந்தனர். இந்த வரிசையில், நடைபெற இருக்கிற 5 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் ஆணைய விளம்பர தூதராக பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கும், தேர்தல் கமிஷனுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் முன்னிலையில் டெல்லியில் கையெழுத்து ஆனது.

ராஜ்குமார் ராவ் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான நியூட்டன் திரைப்படத்தில் தேர்தல் அலுவலராக நடித்து இருந்தார். அதுவும், சத்தீஷ்கார் தேர்தல் களத்தில் அவர் பணியாற்றியதுபோல காட்சிகள் இருந்தன. இந்த படத்துக்காக அவருக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தன. இவற்றை முன்னிலைப்படுத்தி அவரை தேர்தல் கமிஷன் நியமித்து இருப்பதாக தெரிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *