செய்திகள்

சாதனையாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள், காந்தியடிகள் பதக்கங்கள்: ஸ்டாலின் வழங்கினார்

‘அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி இலவச நிலம் வழங்கிய ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது’

சென்னை, ஜன.26–

இன்று சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, திருத்திய நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிலக்கு தொடர்பான காந்தியடிகள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

நாடு முழுவதும் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் இன்று காலை 8 மணிக்கு தேசியக் கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஏற்றி வைத்தார்.

அரசு பள்ளிக்கு 7 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கிய ஆயி அம்மாளுக்கு முதல் அமைச்சரின் சிறப்பு விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மதுரை மாவட்டம் யா. கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்துவதற்காக தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய ஆயி அம்மாளின் தன்னலமற்ற கொடை உள்ளத்தை பாராட்டி அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதினை வழங்கி கவுரவித்தார்.

மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முஹம்மது ஜூபேருக்கு வழங்கப்பட்டது.

மத நல்லிணக்க விருது

முகமது ஜூபேர் என்பவர் மத நல்லிணக்கத்திற்காகப் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார். ஆல்ட் நியூஸ் என்ற பெயரில் இணையதளத்தைத் தொடங்கி, சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உண்மையான செய்திகளை மட்டும் தனது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். அவரது இந்த பணியானது பொய்யான செய்தியினால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்க உதவி வருகிறது.

கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய காணொளி காட்சிகளின் உண்மை தன்மையை சரிபார்த்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி காட்சிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றது அல்ல என தனது இணையதளம் மூலம் தெரியப்படுத்தினார் முகமது ஜூபேர். இவரை பாராட்டும் வகையில் 2024-ம் ஆண்டிற்கான கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் ரூ.25,000-க்கான காசோலையும் சான்றிதழும் முஹம்மது ஜூபேருக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதை பெறுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முஹம்மது ஜுபைர், “தமிழ்நாடு அரசிடம் இருந்து மதநல்லிணக்க விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி. அரசாங்கத்திடம் இருந்து எனக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. குடியரசு தினத்தன்று அரசிடம் இருந்து இத்தகைய விருது கிடைப்பது நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. தமிழ்நாடு அரசுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.

நெல் உற்பத்தியில் சாதனை

நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது சேலம் மாவட்டம் பூலாம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது. இந்த விவசாயி வேளாண்மைத் துறையின் மூலம் வழங்கப்பட்ட நவீன தொழில் நுட்ப பயிற்சிகளின் மூலமாக திருந்திய நெல் சாகுபடி முறையை நன்கு கற்று, அதன் அடிப்பையில் திருந்திய நெல் சாகுபடியை தொடர்ந்து மேற் கொண்டு வருகிறார். அவரது நெல் வயல், மாநில மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் முன்னிலையில், 11.1.2023 அன்று அறுவடை செய்யப்பட்டதில், எக்டருக்கு 13,625 கிலோ நெல் உற்பத்தி திறன் கிடைக்கப் பெற்றுள்ளது. மாநிலத்திலேயே அதிக நெல் உற்பத்தி திறன் பெற்றுள்ள விவசாயி சி.பாலமுருகனை பாராட்டிப் போற்றும் வகையில் நெல் உற்பத்தி திறனுக்கான விருதுச் சான்றிதழ், பரிசுத் தொகை ரூ.5 லட்சம், ரூ.7 ஆயிரம் மதிப்பிலான தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கம் ஆகியவற்றை முதலமைச்சர் வழங்கினார்.

அண்ணா பதக்கம்

வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டதற்காக தூத்துக்குடியை சேர்ந்த சிவக்குமாருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

கனமழை மீட்பு பணியில் ஈடுபட்ட திருநெல்வேலியை சேர்ந்த டேனியல் செல்வசிங்க்; தூத்துக்குடி சிங்கித்துறையை சேர்ந்த

மீனவர் யாசர் அராபத் ஆகியோருக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. இவர்களுக்கு 9 ஆயிரம் மதிப்பு தங்க முலாம் பூசிய பதக்கத்துடன் ரூ.1 லட்சம் காசோலை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழக காவல்துறையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் பணியில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், சென்னை தெற்கு மத்திய நுண்ணறிவு பிரிவு துணை கண்காணிப்பாளரான காசி விஸ்வநாதன், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் முனியசாமி, மதுரை மத்திய நுண்ணறிவு பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் பாண்டியன், ராணிப்பேட்டை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஏட்டு ரங்கநாதன் ஆகியோருக்கு காந்தியடிகள் விருது வழங்கப்பட்டது. இவர்களுக்கு ரூ.40 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மதுரை மாவட்டம் எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்துக்கு முதலமைச்சரின் முதல் பரிசு வழங்கப்பட்டது. நாமக்கல், பாளையங்கோட்டை ஆகியவை முறையே சிறந்த காவல் நிலையத்திற்கான 2-ம் மற்றும் 3-ம் பரிசை பெற்றது

.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *