செய்திகள்

சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு: நடிகர் பாக்யராஜ்க்கு போலீசார் எச்சரிக்கை

கோவை, பிப். 14–

சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு வெளியிட்டதாக நடிகர் பாக்யராஜ்க்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நடிகரும், டைரக்டருமான கே.பாக்யராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை உள்ளிட்ட இடங்களுக்கு தாங்கள் படப்பிடிப்பிற்காகச் செல்வது உண்டு. அந்த பகுதியில் ஓடும் ஆற்றில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்வார்கள். அப்போது ஆற்றின் சுழலில் சிக்கி சிலர் இறந்து போய் விடுவார்கள். இது சாதாரண விபத்து அல்ல, பணம் பறிக்கும் நோக்கில் நிகழ்த்தப்படும் திட்டமிட்ட கொலை என குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த வீடியோ மேட்டுப்பாளையம் மக்களை மட்டுமல்லாது போலீசாரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. நடிகர் பாக்கியராஜின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது எனவும், அதுபோன்ற குற்றச்சம்பவம் ஒன்று கூட மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பதிவாகவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் நீரில் மூழ்கி அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகள் தற்செயலானவை அல்ல என்றும், தண்ணீரில் மூழ்கி நீராடும் நபர்களை நீருக்குள் இருக்கும் சில மர்மநபர்கள் கொடூரமான முறையில் கொலைகள் செய்வதாகவும், அவர்களின் உடல்களை நீருக்குள் தேட உறவினர்களிடம் பணம் கேட்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இவ்வாறு பரவும் வதந்திகள் ஆதாரமற்றது. இதுவரை பவானி ஆற்று பகுதியில் இந்த மாதிரியான கொலை சம்பவம் எதுவும் நடந்ததாக மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் எந்தவித வழக்குகளும் பதியப்படவில்லை.

எந்தவித உயிர் சேதமும்

ஏற்படவில்லை

பவானி ஆறு காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 3 காவல் நிலைய எல்லைகளில் உள்ள சுமார் 20 கிராமங்கள் வழியாக செல்கிறது. அங்குள்ள வன பத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றில் கரையோரத்தில் அமைந்துள்ளது. மேலும், தினமும் சராசரியாக சுமார் 20 ஆயிரம் பக்தர்களும், அதன் வருடாந்திர குண்டம் திருவிழாவின் போது சுமார் 5 லட்சம் பக்தர்களும் வருகின்றனர். 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் ரோந்து காவலர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக பவானி ஆற்றில் இன்று வரை எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

மேலும் தற்கொலை எண்ணத்துடன் ஆற்றில் குதித்த 13 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையில் மொத்தம் 19 ஆபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டு பவானி ஆற்றில் உயிர்ச்சேதம் ஏற்படாத வகையில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உயிர்ச்சேதம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும் எச்சரிக்கை பலகைகள், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

எனவே மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்படும் மரண சம்பவங்கள் குறித்து பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை மற்றும் உண்மையற்றவை. இவ்வாறு வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *