செய்திகள் நாடும் நடப்பும்

கடன் வட்டிகளின் சுமை குறையாதா?


தலையங்கம்


வங்கிகளின் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்த்த பலருக்கு சமீபத்து ரிசர்வ் வங்கியின் முடிவு வருத்தத்தை தருவதாக இருக்கிறது.

சென்ற வாரம் ரிசர்வ் வங்கியின் உயர் மட்டக்குழு அதன் ஆளுனர் சக்தி காந்த தாஸ் தலைமையில் கூடி பணவீக்கம் குறைந்து வருவதை மனதில் கொண்டு வங்கிகளின் பல்வேறு கடன்களுக்கு வட்டி சுமையை குறைக்கும் வசதி இருந்த நிலையில் வட்டி குறைக்கப்படும் என்று மிக ஆவலாக எதிர்பார்த்தது. ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் இம்முறையும் மாற்றம் கிடையாது, அப்படியே தொடரும் என்று அறிவித்துள்ளார்.

தொடர்ந்து 6வது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாத நிலையில் வீட்டுக்கடன், வாகன கடன் உட்பட அனைத்து கடன்கள் மீதான வட்டிகள் ஏறாது இருப்பதும் நல்ல செய்தி தான்.

பணம் வீக்கம் குறைந்துள்ளது, நாட்டின் பொருளாதார குறியீடுகள் மேல் நோக்கி நடைபோட்டுக் கொண்டும் இருக்கிறது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளில் பெரும் பங்கை நமது சந்தைகளில் முதலீடு செய்தும் வருகிறார்கள்.

கடந்த மாதம் பொங்கல் வாரத்திற்குப் பிறகு ரியல் எஸ்டேட் துறையில் பெரிய எழுச்சியையும் காண முடிந்தது. வீடு வாங்குவோரும், வீடு கட்ட முன் வந்தவர்களும் வங்கிகளை நாடியது அதிகரித்தும் இருந்தது.

இதையெல்லாம் மனதில் கொண்டு அரசியல் காரணங்களுக்கு அடிபணியாமல் நாட்டின் வளர்ச்சியே இலக்கு என்று வட்டி விகிதத்தை குறைத்துவிட்டு வங்கிகளின் வருவாய்க்கு அடைப்பு போடுவதால் பயனில்லை என்று உணர்ந்து இம்முறை வட்டிகளை குறைக்காதது துணிவான முடிவு என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அடுத்த அமர்வு ஏப்ரல் மாதத்தில் இருப்பதால் அடுத்த நிதி ஆண்டு பல்வேறு நம்பிக்கைகளுடன் துவங்கும் நேரத்தில் வட்டி சுமை குறைப்புக்கு வழி இருக்கிறது.

வட்டி சதவீதம் குறைக்கப்படாததால் வங்கிகளின் பங்குகள் கிட்டத்தட்ட 10% வளர்ச்சியை கண்டிருப்பது என்பது நல்ல செய்தி தான். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பங்கு விலை புதிய உச்சமாக ரூ.66–ஐ தாண்டியது, யூகோ வங்கி பங்குகள் ரூ.70 வரை உயர்ந்து தற்சமயம் ரூ.56 என்ற நிலையில் இருக்கிறது.

இம்முறை நடந்த அமர்வுக்கு பிறகு வெளியிடப்பட்ட ஒரு முக்கிய முடிவு சிறு வர்த்தகர்களுக்கு தரப்படும் கடன்கள் மீதான வட்டி விகிதமும், மாதாந்திர பிடிப்பு எளிதாக நுகர்வோருக்கு புரியும்படி அமைக்க வரையறைகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இதனால் பயன் என்னவென்றால், கடன் மீதான வட்டிக்கான ஈவுத்தொகை மாதாந்திர பிடிப்பில் எவ்வளவு எடுக்கப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிந்து விடும்.

கொரோனா காலகட்டத்தில் கடன் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு இருந்தது அல்லவா? அச்சமயத்தில் பலர் வாங்கிய கடனை வேகமாக செலுத்தி குறைந்த வட்டியின் பயனை பெற முனைந்து இருப்பார்கள்.

அவர்களுக்கு வட்டி சுமை உண்மையில் குறைந்ததா? அல்லது உயர் அளவில் தான் கணக்கிடப்பட்டதா? என்ற சந்தேகம் இருந்திருக்கும். வங்கி மேலாளரை அணுகினாலும் உரிய பதில் கிடைத்து இருக்காது, சாமானியனுக்கோ வங்கியின் கணக்கு அறிக்கையை படித்து புரிந்து கொள்வதில் சிரமம் இருப்பதையும் அறிவோம்.

ஆகவே ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கும் இத்திட்டம் சிறு, நடுத்தர மாதாந்திர கடன் வாங்குபவர்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாகும். காரணம் கடன் சுமையை எப்படி சமாளிப்பது என்று சிந்தித்து உரிய வகையில் அதை திருப்பித் தரும் நடவடிக்கைகளை எடுக்கலாம் அல்லவா?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *