செய்திகள்

அமெரிக்க அதிபரின் மகன் 11 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு

குற்றச்சாட்டுகளால் சிக்கலில் ஜோ பைடன்

நியூயார்க், டிச. 08–

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ரூ.11 கோடி வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தால், ஜோ பைடனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பலமுனை போட்டிகளையும் எதிர்கொண்டு வருகிறார். இதற்கிடையில், உலகளவில் பல சலசலப்புக்கும் பெயர்போனவராகவே வலம் வருகிறார்.

இந்த நிலையில், தற்போது அவரது மகன் ஹண்டர் பைடன் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். ஜோ பைடனின் மகனான ஹண்டர் பைடன் ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞர். அவரின் தனிப்பட்ட ஈடுபாட்டால் பரப்புரையாளர்-கலைஞராக மாறினார். ஆனால், குடிப்பழக்கம், கோகையின் போதைப் பழக்கத்தால் அவரது வாழ்க்கை சிதைந்ததாகக் கூறப்படுகிறது.

ரூ.11 கோடி வரி ஏய்ப்பு

இதற்கிடையில், சிறப்பு ஆலோசகர் டேவிட் வெயிஸ், அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 56 பக்க குற்றப்பத்திரிகையில், “ஹண்டர் பைடன் 2016 – 2020 வரை 7 மில்லியனுக்கும் அதிகமான டாலர் சம்பாதித்ததாகவும், இந்தப் பணத்தைப் போதைப்பொருள், எஸ்கார்ட், தோழிகள், சொகுசு ஓட்டல்கள், வாடகை பொருள்கள், கவர்ச்சியான கார்கள், ஆடைகள் என ஆடம்பரமாக செலவழித்துள்ளார்.

ஆனால், 2016 – 2019 வரையிலான ஆண்டுகளில் செலுத்த வேண்டிய குறைந்தபட்சம் 1.4 மில்லியன் டாலர் ( சுமார் 11 கோடி ரூபாய்) வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்கிறார் என குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக 9 குற்றச்சட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வழக்குக்கு முன்னர் 2018-ம் ஆண்டில் 38-காலிபர் கோல்ட் கோப்ரா ரிவால்வரை வாங்கியது தொடர்பாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதும், அது விசாரணையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கட்சி தேர்தலுக்கான களத்தைத் தயார் செய்துகொண்டிருக்கும்போது, அவரது மகன் மீதான தொடர் குற்றச்சாட்டுகள் கட்சிக்கும் ஜோ பைடனுக்கும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *