செய்திகள்

கொரோனா அறிகுறி உள்ள அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்

தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சென்னை, டிச.30–

காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவரும் ஆர்டிபிசிஆர் பரிசோதனையை கட்டாயம் செய்ய வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

கோவா, மகாராஷ்டிரம், கர்நாடகம், தெலங்கானா, கேரளத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் ஜேஎன்1 வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா பரவல் குறித்து மாநில அரசுகளுக்கு பல்வேறுஅறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத் துறை வழங்கியுள்ளது.

குறிப்பாக, அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அறிகுறிகள் உள்ளோருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்துமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டார்.

அதன்படி, தினமும் 350க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் யாருக்கு எல்லாம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தலை சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு செல்வவிநாயகம் வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

தொற்றுஉறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தீவிர நுரையீரல் தொற்றுக்கு உள்ளானவர்கள், இன்ப்ளூயன்சா போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *