செய்திகள்

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்

அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை, டிச. 30–

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய அனைத்து அரசு விரைவு பேருந்துகளும் இனி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லாது, கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதனையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் தென் மாவட்டங்களுககு பேருந்துகள் இயக்கப்படும்.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்.

நாளை முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும். சென்னையில் இருந்து சாதாரண நாட்களில் புறப்படும் 300 அரசு விரைவு பேருந்துகளும், வார இறுதி நாட்களில் புறப்படும் 360 அரசு விரைவு பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்கும்.

விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, கோவை, நெல்லை என 6 அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வந்து அந்தந்த வழித்தடங்களில் இயக்கப்படும். பெங்களூரு மற்றும் கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயங்கும்.

மொத்தம் 1140 புறப்பாடுகளும் பொங்கல் வரை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும். பொங்கலுக்கு பிறகு அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும்.

கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகருக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என 280 சர்வீஸ் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்திற்கு 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், கிண்டிக்கு 3 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும் என மாநகர போக்குவரத்து இயக்கப்படும். தேவைப்பட்டால் ரெயில் நிலையங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.

ஆம்னி பேருந்துகள் இன்றிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை தொடங்கி விட்டார்கள். பொங்கல் பண்டிகைக்கு பிறகு அனைத்து பேருந்துகளுமே கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *