செய்திகள்

காசா மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு

காசா, நவ. 21–

காசாவிலுள்ள மருத்துவமனையொன்றில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து காசா பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:–

காசாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியன் மருத்துவமனையைச் சுற்றிலும் நடந்த மோதலின்போது அதன் 2-ஆவது தளத்தில் இஸ்ரேல் ராணுவத்தின் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12 பேர் காயமடைந்தனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த மாதம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி என கூறி காசா மீது போர் தொடுத்த இஸ்ரேல், மூர்க்கத்தனமாக பாலஸ்தீனியர்களை வேட்டையாடி வருகிறது. காசா பகுதியை ஒரு மாதத்துக்கும் மேல் முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டு வீச்சு நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தரைவழியாகவும் காசாவுக்குள் நுழைந்து தாக்குல் நடத்தி வருகிறது. இது குறித்து, ஐநா பலமுறை கண்டனங்கள் தெரிவித்த பிறகும், இஸ்ரேல் அடங்க மறுக்கிறது.

மருத்துவமனைகளில் தாக்குதல்

மருத்துவமனைகளில் கூட குண்டுவீசி நோயாளிகளையும், குழந்தைகளையும் கொன்று குவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காசாவின் மிகப் பெரிய அல்-ஷிஃபா மருத்துவமனையை 5 நாள்களாக முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேல் படையினர் அந்த மருத்துவமனைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

அல்-ஷிஃபா மருத்துவமனை மட்டுமின்றி காஸாவின் பிற மருத்துவமனைகளிலும் ஹமாஸ் அமைப்பினா் பதுங்கியிருந்து செயல்படுவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல், இந்தோனேசியன் மருத்துவமனையைச் சுற்றிலும் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டு 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *