செய்திகள்

பட்ஜெட் கூட்டத்தொடர்: நாடாளுமன்ற வளாக பாதுகாப்பு மத்திய படையிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி, ஜன.24-

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தை பாதுகாக்கும் பொறுப்பை மத்திய தொழிலக பாதுகாப்பு படை ஏற்றுக்கொண்டது. விமான நிலைய பாணியில் அங்கு சோதனை நடத்தப்பட உள்ளது.

கடந்த மாதம் 13ந்தேதி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது, மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 பேர் திடீரென சபைக்குள் குதித்து வண்ண புகைக்குண்டுகளை வீசினர்.

அவர்களும், நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்த அவர்களுடைய ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், இச்சம்பவம் நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாட்டை காட்டுவதாக புகார் எழுந்தது.

இதுவரை நாடாளுமன்ற பாதுகாப்பு, மக்களவை செயலகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. மக்களவை செயலகம் நியமித்த பாதுகாவலர்கள் மற்றும் டெல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், வண்ண புகைக்குண்டு வீச்சு சம்பவத்தின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு குறித்து மறுஆய்வு செய்தது. அதில், நாடாளுமன்ற வளாக பாதுகாப்பை மத்திய ஆயுத போலீஸ் படையான மத்திய தொழிலக பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக அந்த படையை சேர்ந்த 140 வீரர்களை ஒதுக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

நாடு முழுவதும் 1 லட்சத்து 70 ஆயிரம் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் உள்ளனர். அவர்கள் நாட்டில் உள்ள 68 விமான நிலையங்களிலும், அணுசக்தி நிலையங்களிலும், விண்வெளி தொடர்பான அலுவலகங்களிலும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த 140 வீரர்களும் நேற்று முன்தினம் நாடாளுமன்ற பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தை பழக்கப்படுத்திக்கொள்ளும் வகையில் சுற்றி வருகிறார்கள்.

வருகிற 31-ந் தேதி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதில் இருந்து பார்வையாளர்களையும், அவர்களது உடைமைகளையும் விமான நிலைய பாணியில் சோதனையிடும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

அதன்படி, எக்ஸ்ரே எந்திரங்கள் மற்றும் கையடக்க டிடெக்டர்களை பயன்படுத்தி, பார்வையாளர்களும், அவர்களது உடைமைகளும் சோதனையிடப்படும். அவர்களது ஷூ, கனரக உடைகள், பெல்ட் ஆகியவை ஒரு தட்டில் வைக்கப்பட்டு, எக்ஸ்ரே எந்திரம் வழியாக பரிசோதனை செய்யப்பட்ட பிறகு வெளியே வரும்.

இந்த சோதனைகளை கடந்த பிறகுதான், புதிய நாடாளுமன்றத்துக்கோ, பழைய நாடாளுமன்றத்துக்கோ செல்ல மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் அனுமதிப்பார்கள். தீவிபத்தில் இருந்து நாடாளுமன்ற கட்டிடத்தை பாதுகாக்கும் பொறுப்பும் அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புதிய பாதுகாப்பு நடைமுறைப்படி, நாடாளுமன்ற வளாகத்துக்குள் புகைப்படமோ, வீடியோவோ எடுக்க நாடாளுமன்ற ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்ற கட்டிட உதவி இணை செயலாளர் (பாதுகாப்பு) சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதிகாரிகளும், பார்வையாளர்களும் ஸ்மார்ட்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களுக்கும் படம் எடுக்க அனுமதி இல்லை என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *