செய்திகள்

அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக ஆய்வு தகவல்

டெல்லி, நவ. 21–

இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR ) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பிறகு, இளைஞர்கள் எந்த காரணமுமின்றி திடீரென மாரடைப்பால் மரணம் அடையும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்த மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசியே காரணம் என அதிக புகார்கள் எழுந்தது.

தடுப்பூசி காரணமல்ல

இதனையடுத்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் திடீர் மாரடைப்பு மரணங்கள் குறித்து 2021 அக்டோபர் 1 ந்தே்தி முதல் 2023 மார்ச் 31 ந்தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள 47 மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தியது. 18-45 வயதுக்குட்பட்டவர்களில், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த 729 பேரின் மரணங்களை மையமாக கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் அறிக்கையை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் இளைஞர்களிடையே அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல எனவும் அவர்களது வாழ்க்கை முறை சூழல்கள், குடும்ப உடல்நல வரலாறு போன்றவையே விவரிக்கப்படாத திடீர் மரணங்களுக்கு காரணம் எனவும் இந்திய ஆராய்ச்சி மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசியின் மீது கூறப்பட்ட புகார்களுக்கு மாறாக, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இந்த விவரிக்கப்படாத திடீர் மரணங்கள் ஏற்படும் வாய்ப்பு குறைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *