செய்திகள்

கடலுக்கு அடியில் சங்கிலி வலையில் சிக்கிய சீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்

55 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

பெய்ஜிங், அக்.5–

கடலுக்கு அடியில் இருந்த சங்கிலி வலையில் சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியதில் 55 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

சீனாவுக்கும், கொரிய தீபகற்பத்துக்கும் இடையே உள்ள மஞ்சள் கடல் பகுதியில் சீன கடற்படைக்கு சொந்தமான அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வந்தபோது கடலுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கியது. இதில், அந்த கப்பலின் கேப்டன், 21 அதிகாரிகள் உள்ளிட்ட 55 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி இந்த கப்பல் ஷாங்டாங் மாகாணம் அருகே வந்த போது, கடலுக்கு அடியில் எதிரி நாட்டுக் கப்பல்களைத் தடுக்க சீன ராணுவத்தினரால் வைக்கப்பட்டிருந்த இரும்புச் சங்கிலியிலும், நங்கூரத்திலும் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் சிக்கிக் கொண்டது. அந்த சங்கிலிப் பிணைப்பிலிருந்து கப்பலால் வெளியே வரமுடியவில்லை.

எதிரி நாட்டுக் கப்பல்கள் சீன கடல் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கவே இந்த பொறிகளை சீன கடற்படை வைத்திருந்தது. சங்கிலியில் சிக்கிக் கொண்டு தண்ணீரின் மேல்பகுதிக்கு வருவதற்கு அந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலுக்கு 6 மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது. அதற்குள்ளாக கப்பலில் இருந்த ஆக்சிஜன் முழுமையாக தீர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அந்த கடல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த உளவுக் கருவிகள் கண்டுபிடித்து தெரிவித்துள்ளன என பிரிட்டன் இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அணுசக்தி நீர்மூழ்கியானது சீனாவின் பிஎல்ஏ ராணுவப் பிரிவுக்குச் சொந்தமானது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சீன கடல் பகுதிக்குள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் வருவதைத் தடுக்கவே இந்த பொறிகளை சீன கடற்படை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக சீனா வைத்த பொறியில் அந்த நாட்டுக் கப்பலே சிக்கி, கடற்படையைச் சேர்ந்த 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *