செய்திகள்

இறுதி ஊர்வலத்தின் போது சாலைகளில் மாலைகளை வீசக்கூடாது; மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

டி.ஜி.பி. சுற்றறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்

சென்னை, மார்ச்.27-

பொதுமக்களின் உயிர்பாதுகாப்பை கருதி, இறுதி ஊர்வலத்தின்போது சாலைகளில் மலர்மாலைகள், மலர்வலையங்களை வீசக்கூடாது என்றும், மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் டி.ஜி.பி.யின் சுற்றறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், “கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் இறுதி ஊர்வலத்தின் போது, சாலையில் மலர் மாலைகள் வீசப்பட்டன. இதன் மீது மோட்டார் சைக்கிள் ஏற்றி வழுக்கி விழுந்து ஒருவர் பலியாகி விட்டார். இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த கடிதத்தை மனுவாக கருதி, தாமாக முன்வந்து வழக்கை ஐகோர்ட் தலைமை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் அனைத்து போலீஸ் கமிஷனர்களுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் தமிழ்நாடு டி.ஜி.பி. கடந்த 20-ந் தேதி அனுப்பியுள்ள சுற்றறிக்கை தாக்கல் செய்ப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

இறுதி ஊர்வலம் என்பது மக்களின் கலாசாரம் மற்றும் உணர்வுப்பூர்வமான விவகாரம் ஆகும். அதேநேரத்தில், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கீழ் கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இறந்தவரின் உறவினர்கள், இறுதி ஊர்வலம் எப்போது? எந்த பாதை வழியாக செல்லும் என்பதை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்படி, ஊர்வலம் செல்லும் வழியில் போக்குவரத்து சரி செய்து கொடுக்கப்படும். இறந்தவரின் உடல் மீது போடப்படும் மாலைகள், மலர் வளையங்களை வீட்டுக்கு அருகேயே பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். இறுதி ஊர்வலத்தின்போது, அதிக அளவில் மாலைகள், மலர்வலையங்களை கொண்டுச்செல்லக்கூடாது. சாலைகளிலும் வீசக்கூடாது. அதை மீறி சாலைகளில் வீசப்பட்டால், உள்ளூர் போலீசார், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான அனுமதியில்லாமல், மரணம் குறித்து அறிவிப்பு விளம்பர பலகை, பேனர்கள் வைக்கக்கூடாது.

நெடுஞ்சாலை, பிரதான சாலைகள், உயர்மட்ட பாலங்களில் இறுதி ஊர்வலத்தை நடத்துவதை உறவினர்கள் தவிர்க்க வேண்டும். இறுதி ஊர்வலம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். சட்ட ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படாத வகையில் தகுந்த நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும். பொதுமக்கள் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த நிபந்தனைகளை யாரும் மீறக்கூடாது. மீறினால், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த சுற்றறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “டி.ஜி.பி.யின் இந்த சுற்றறிக்கை தீவிரமாக அமல்படுத்தப்படும் என்று நம்புகிறோம். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *