செய்திகள்

ஷிண்டே அணி தான் உண்மையான சிவசேனா: மராட்டிய சபாநாயகர் அறிவிப்பு

மும்பை, ஜன.11-

சிவசேனா 2 அணிகளை சேர்ந்த எந்த எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை என்றும், ஷிண்டே அணியினர் தான் உண்மையான சிவசேனா என்றும் மராட்டிய சபாநாயகர் அறிவித்தார்.

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. மொத்தம் 55 எம்.எல்.ஏ.க்களை கொண்ட அந்த கட்சியை ஏக்நாத் ஷிண்டே உடைத்தார். 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை அவர் தனதாக்கி கொண்டதால், உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது.

இந்த அரசியல் நெருக்கடி நடந்த சூழலில் ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எதிரணி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உத்தவ் தாக்கரே தரப்பினர் அப்போதைய சபாநாயகரிடம் தகுதி நீக்க மனுவை அளித்தனர். இதேபோல உத்தவ் தாக்கரே தரப்பை சேர்ந்த ஆதித்ய தாக்கரேவை தவிர்த்து 14 எம்.எல்.ஏ.க்கள் மீது ஏக்நாத் ஷிண்டே அணியினர் தகுதி நீக்க மனு அளித்தனர்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை கைப்பற்றினார். சிவசேனா கட்சி பெயர் மற்றும் கட்சியின் வில்-அம்பு சின்னம் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சொந்தம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனால் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா என்ற பெயரில் உத்தவ் தாக்கரே அணி செயல்பட்டு வருகிறது.

இதற்கு மத்தியில் நிலுவையில் உள்ள சிவசேனாவின் இருதரப்பு எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க மனுக்கள் மீது தற்போதைய சபாநாயகர் முடிவு எடுக்குமாறு கடந்த ஆண்டு மே மாதம் 11-ந் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் சபாநாயகர் காலம் தாழ்த்தி வருவதாக உத்தவ் தாக்கரே தரப்பு அணுகியபோது, தகுதிநீக்க மனுக்கள் மீது ஜனவரி 10-ந் தேதிக்குள் (நேற்று) முடிவை அறிவிக்குமாறு சுப்ரீம் கோர்ட் சபாநாயகருக்கு கெடு விதித்தது.

இதையடுத்து சபாநாயகர் ராகுல்நர்வேகர் சிவசேனாவின் இருதரப்பை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரித்தார். சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி நேற்று அவர் தனது முடிவை அறிவித்தார்.

மனுக்களை நிராகரித்தார்

அப்போது, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்பட அவரது தரப்பு 16 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க மனுக்களை சபாநாயகர் அதிரடியாக நிராகரித்தார். இதேபோல உத்தவ் தாக்கரே தரப்பை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க மனுக்களையும் நிராகரித்தார்.

மேலும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் தான் உண்மையான சிவசேனா என்றும் கூறினார். அவர்கள் ஏன் உண்மையான சிவசேனா என்பதற்கான 10 காரணங்களையும் அவர் தெரிவித்தார்.

சபாநாயகர் உத்தரவு மூலம் ஏக்நாத் ஷிண்டேவின் எம்.எல்.ஏ. பதவி நீடிப்பதால், அவரது அரசு தப்பியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *