சிறுகதை

மீன் வாசம் – ராஜா செல்லமுத்து

சந்தடிகளில் சிக்கி நகர்ந்து கொண்டிருந்தது அந்த நகரப் பேருந்து.

மெட்ரோ ரயில் பணிக்காக சென்னை முழுவதும் சிரமப்பட்டுத்தான் சென்று கொண்டிருக்கின்றன வாகனங்கள். காலை 10 மணிக்கு ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானித்தால் காலை 8 மணிக்கே செல்ல வேண்டும் என்ற நிலையில் இருக்கிறது சென்னைச் சாலைகள்.

இந்த இடர்பாடுகளுக்கு மத்தியில் நகர்ந்து கொண்டிருந்தது ஒரு நகரப் பேருந்து. காலை நேரம் என்பதால் கல்லூரி, பள்ளி அலுவலகம் வேலைக்கு செல்பவர்கள் என்று அந்த பேருந்து முழுவதும் ஆட்கள் ஆக்கிரமித்து நின்று கொண்டிருந்தார்கள். அவ்வளவு பெரிய கூட்டம் இல்லை என்றாலும் ஆங்காங்கே ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

அந்த இடிபாடுகளில் ஒரு கிழவி அலுமினியப் பாத்திரம், கூடை என்று அந்த பேருந்தில் மீன் வாசம் வீசவீச அமர்ந்திருந்தாள்.

இதைப் பார்த்த குமரனுக்குக் கோபம் வந்தது .காலையில இந்த வாசத்தை பிடிச்சிக்கிட்டு” என்று மூக்கைப் பிடித்து அந்த மீன்காரியை முறைத்துப் பார்த்தான் குமரன்

என்ன தம்பி முறைச்சு பார்க்கிறே? நான் ஒன்னும் பிக்பாக்கெட் அடிக்க வரல. ஒழைச்சு சம்பாரிச்சிட்டு வர்றேன். உனக்கு ஏன் கஷ்டமா இருக்கு? என்று கிழவி பதில் சொல்ல

பேசுறதெல்லாம் பெருசாத்தான் பேசுறீங்க? இப்படி பொதுமக்கள் கூடி வர்ற இடத்துல மீன் பாத்திரத்த கொண்டு வர்றது நாகரிகமா இருக்கா ? என்று குமரன் கேட்டபோது

தம்பி நானாவது மீன் பாத்திரத்த கொண்டு வரேன். சில பேரு காலையிலேயே குடிச்சிட்டு வீச்சத்தோட வந்து பஸ்ல ஏறுறான். குளிக்காம கொள்ளாம பலபேர் ஏறுறாங்க. அத்தனை மனுஷனுக்குள்ளயும் அசிங்கமும் கசடும் கெடக்குது. அதவிட இந்த மீன் வாசம் ஒன்னும் குறைந்து போகல தம்பி என்று கிழவி பதில் சொல்ல, இருவர் பேசுவதையும் பேருந்தில் இருந்தவர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.அது தவிர ஒருவரும் ஏன் இப்படி பேசுகிறீர்கள்? என்று இருவரின் சண்டையை விலக்கிவிடவில்லை. இருவருக்குமான வாக்குவாதம் நீண்டு ஒரு கட்டத்தில் போய் நின்றது.

நகர்ந்து கொண்டிருந்த பேருந்தில் தன் சட்டைப்பை கால் சட்டையைத் தடவி பார்த்த குமரன் அதிர்ச்சியடைந்தான்.தன்னுடைய பர்சை யாரோ திருடிப் போய்விட்டதாக உணர்ந்தான்.

சார் என்னோட பர்ஸ யாரோ திருடிட்டாங்க என்கிட்ட பணம் இல்ல. லஸ்சுக்கு ஒரு டிக்கெட் குடுங்க என்று கேட்க

பணம் இல்லாம நான் டிக்கெட் கொடுத்துட்டு ,ராத்திரி பணத்தை டிப்பாேவுல கட்டும் போது என் பணத்த போட்டு கட்டச் சொல்றியா? இப்படி எத்தனை பேருப்பா கிளம்பி வந்து இருக்கீங்க? பணமிருந்தா பஸ்ல இரு இல்ல கீழே எறங்கு.கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கெழவி கூட பெருசா வாக்குவாதம் பண்ணிக்கிட்டு இருந்த. இப்ப கீழ எறங்கு

என்று தன் கையில் இருந்த விசிலை வாயில் வைத்து ஊதப் போனார் அந்த நடத்துனர்

சார் ஒரு முக்கியமான இன்டர்வியூ நான் போகணும் என்று குமரன் சொன்னபோது

அந்தப் பேருந்தில் இருந்தவர்கள் எல்லாம் அந்த நபரை வேடிக்கை பார்த்தபடி இருந்தார்கள். மற்றவர்கள் பணம் கொடுத்து உதவுவதற்கு முன்னால் அதே மீன் காரக்கிழவி

ஏன் தம்பி வருத்தப்படுற? நீ எங்க போகணும்னு நினைக்கிறியோ அங்க போ. இந்தாபா கண்டக்டரு அந்தத் தம்பி போறதுக்கு உண்டான டிக்கெட்டுக்கு காசு .அந்த தம்பிக்கு ஒரு டிக்கெட்ட கிழிச்சு அது கையில குடு என்று கூறினாள் அந்தப் பெரிய மனுசி.

இதைப் பேருந்தில் அமர்ந்திருந்த அத்தனை மனிதர்களும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள் .

பஸ் ஏறியதும் மீன் வாசம் என்று மூக்கை பிடித்தும் அருவருப்பாக இந்தக் கிழவி இருக்கிறாள் என்றும் ஒதுங்கியும்,அந்தக் கிழவியை ஏகபோகமாகத் திட்டியதும் குமரனுக்கு நினைவுக்கு வந்தது.

இல்ல வேண்டாம் என்று மறுத்தான், குமரன்.

தம்பி என்னைய பேரப்பிள்ளைக திட்டினா நான் தாங்கிக் மாட்டேனா? போ தம்பி ஒனக்கு என்னோட மீன் வாசம் பிடிக்கல .நீ திட்டுன. அது வேற. நீ பஸ்ஸுக்கு காசு இல்லாமல் நிற்கிறதும் ஒரு முக்கியமான எடத்துக்கு போகணும் நீ சொல்றதும் என் காதுல கேட்டுச்சுப்பா .இத பாத்துட்டு நான் சும்மா இருந்தேன்னா நான் மனுசியா என்ன?

என் பேரன் பேத்திகளுக்கு இதே மாதிரி ஒரு நிலைமை எங்கேயாவது ஒரு நாள் ஏற்படும் அங்க ஒரு ஈரமுள்ள, எரக்கமுள்ள மனுசன் கண்டிப்பா உதவி செய்வான்.

நீ என்னைய பேசுனது எல்லாம் நான் மனசுல வச்சுக்க மாட்டேன் தம்பி என்று உரிமையோடு சொன்னாள் அந்த மீன்காரி

இதை சற்றும் எதிர்பார்க்காத குமரன்

இப்பாேது என்ன செய்வது? என்று தெரியாமல் கண்களில் நீர் நிறைய அந்தக் கிழவியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

தம்பி போப்பா. நீ போற வேல ஜெயமாகும். இந்த பாட்டி ஒன்னைய வாழ்த்துகிறேன்

என்று குமரனுக்கு வாழ்த்துத் தெரிவித்தாள் அந்த மீன்காரக்

கிழவி. அவரைப் பார்த்தபடியே சிலையாக நின்று கொண்டிருந்தான் குமரன்.

இப்போது கிழவியின் மீன்வாசம் அவன் மூக்கில் ஏறவில்லை; அந்தத் தாயின் நற்செயல் வாசம் அவன் நாசியெங்கும் பரவியது.

தம்பி இங்க ஒரு இடம் இருக்கு வந்து உட்காருங்க என்று சீட்டில் அமர்ந்திருந்த ஒருவர் குமரனைக் கூப்பிட

அந்தக் கிழவியைத் திரும்பி பார்த்தபடியே

அந்த சீட்டில் போய் அமர்ந்தான் குமரன்

மனுசனா இருந்த இப்படித்தான் தம்பி இருக்கணும் .கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அந்த கிழவிய நீ திட்டுனா. ஆனா அந்த கிழவி நீ திட்டுன எதையும் மனசுல வைக்காம, நாங்கெல்லாம் காசு கொடுக்க யாேசிக்கிறதுக்கு முன்னாடியே பணத்தை எடுத்துக் கொடுத்திருக்கு பாரு அதான்யா தமிழருடைய உணர்வு

என்று சொல்ல பின் சீட்டில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கிழவியைப் பார்த்தான், குமரன்

அந்தப் பேருந்தில் இருந்தவர்கள் எல்லாம் மீன்காரக் கிழவியை உச்சுக் கொட்டிப் பேசினார்கள்.

பேருந்து முழுவதும் மீன் வாசமடித்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *