சிறுகதை

புது உறவு – கரூர் அ. செல்வராஜ்

காலை 7 மணி. பால் பண்ணையில் அரை லிட்டர் பசும் பாலை வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிச் செல்வதற்காக தார் சாலையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தாள் வசந்தி.

வசந்தியுடன் வழக்கம் போல உடன் வரும் விஜயாவும் பசும் பாலை வாங்கிக் கொண்டு மெதுவாக நடந்து வந்தாள். சிறிது தூரம் இருவரும் நடந்தபோது மெளனம்.

பின்பு விஜயா தனது தோழி வசந்தியைப் பார்த்து ,

‘‘வசந்தி’’!என்றாள்.

‘‘சொல்லு விஜாயா’’

‘‘நீயும் நானும் பால் பண்ணையில் பசும்பால் வாங்க ஆரம்பிச்ச நாளில் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆனோம். அறிமுகம் நட்பா ஆரம்பிச்சுது. அந்த நட்பு இப்போது நெருங்கிய நட்பா மாறியிருக்கு. இந்த நட்பு மேலும் மேலும் வளரணும். நமது நட்பு ஒரு புதிய உறவா மாறணும் அப்படீன்னு எனக்கு ஆசை. என் ஆசையை நிறைவேற்றித் தருவியா? என்று கேட்டாள் விஜயா.

விஜயாவின் ஆசையில் அடங்கி இருப்பது என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பிய வசந்தி உடனே தனது தோழி விஜயாவிடம் ,

‘‘விஜயா!’’ நமக்குள் வளர்ந்து இருக்கிற நட்பு ஒரு ஆலமரம் போல பரந்து விரிந்துள்ளது உண்மை தான். அதை நான் மறுக்கலே. நமது நட்பு ஒரு புதிய உறவா மாறணும் அப்படீன்னு ஆசைப்படறே. உன் ஆசை என்ன? என்னால் நிறைவேற்ற முடியுமா? அப்படீங்கிறதை தற்சமயம் என்னாலே யூகிக்க முடியலே. அதனாலே அதைப் பத்தி எனக்குப் புரியும்படி நீ கொஞ்சம் சொல்லு.

‘‘வசந்தி!’’ நான் சொல்லப் போறது ஒரு நல்ல விஷயம். என்னுடைய கோரிக்கையை நீ மனசு வச்சா கண்டிப்பாக நிறைவேத்த முடியும். என்னுடைய கோரிக்கையை இந்த ரோட்டுலே வச்சு சொல்ல விரும்பல. உன் வீட்டுக்கு வந்து சொல்றேன்’ என்றாள் விஜயா.

விஜயாவின் கோரிக்கையில் என்ன இருக்கும்? என்பதை உடனே யூகிக்க முடியாமல் திணறிய வசந்தி

‘‘விஜயா!உன் ஆசைக்கு தடை போட நான் விரும்பலே. அதனாலே உனக்கு வர முடியுமானால் இன்னிக்கு சாயந்தரம் 5 மணிக்கு மேலே எப்ப வேணுமின்னாலும் என் வீட்டுக்கு வரலாம். என் வீடு உனக்குத் தெரிந்சது தான். நீ வா, உனக்காக நான் வீட்லே காத்துகிட்டிருப்பேன். சரி விஜயா சாயந்தரம் நேரில் பேசுவோம்’’ என்று விடை சொல்லி புறப்பட்டாள் வசந்தி.

அவர்கள் வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கிற பாரதி தெருவுக்கு வந்ததும் அவரவர் வீட்டுக்கு பிரிந்து சென்றார்கள்.

சாயந்தரம் 5 மணிக்கு வசந்தி தன் வீட்டுக்கு நேரில் வரச் சொல்லி இருப்பதை மறக்காத விஜயா மகிழ்ச்சியோடு கிளம்பி வசந்தியின் வீட்டுக்குச் சென்றாள்.

வசந்தி வீட்டுக்குச் சென்ற விஜயா அழைப்பு மணியை அடித்தாள்.

அழைப்பு மணியோசை கேட்டுக் கதவைத் திறந்த வசந்தி வெளியில் நின்று கொண்டிருந்த விஜயாவை முக மலர்ச்சியோடு வரவேற்று அழைத்துச் சென்று நடுக் கூடத்தில் அமர வைத்தாள். தேநீருடன் பிஸ்கட்டும் தந்து உபசரித்தாள். தோழியின் உபசரிப்பில் உற்சாகம் அடைந்தாள்.

‘விஜயா! நீ சொல்ல ஆசைப்பட்டதை இப்ப தயங்காமல் செல்லு’ என்றாள்.

‘‘வசந்தி!’’ டிசம்பர் மாதம் வந்த மிக்ஜாம் புயலுக்குப் பிறகு சென்னையிலிருந்து என் இளைய மகன் ஜெயச்சந்திரன் லீவுலே வீட்டுக்கு வந்திருந்தான். அவன் சென்னையிலே ஒரு ஐடி கம்பெனியிலே என்ஜினீயராக வேலை பார்க்கிறான். நல்ல சம்பளம் வாங்குறான். அவனைப் பத்தி உனக்கும் தெரிஞ்சிருக்கும். அவனுக்கு இந்த ஜனவரி மாசம் 27 வயது தொடங்குது. அதனாலே ஒரு நல்ல, படிச்ச பொண்ணு பார்த்து உடனே கல்யாணம் செய்யலாம்னு முடிவு செஞ்சிருக்கோம். என் மகனுக்கு தேடுற நல்ல பொண்ணு உன் மகள் தான். உன் இளைய மகளை என் இளைய மகனுக்கு கல்யாணம் செய்து வைக்க ஆசைப்படறேன். இதில் இது என் விருப்பம் மட்டும் இல்லே; என் வீட்டுக்காரர், என் மூத்த மகன், கல்யாண வயசிலே இருக்கிற என்னுடைய இளைய மகன் இப்படி எங்க வீட்டிலிருக்கிற எல்லோருக்கும் விருப்பம் தான். முடிவு சொல்ல வேண்டியது நீ தான். உன் வீட்டுக்காரர், உன் மகள், மத்த எல்லோரிடமும் கலந்து பேசி முடிவு சொல்லு. உன் முடிவு நல்ல முடிவா இருந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்’’ என்றாள் விஜயா.

‘‘விஜயா!’’ உன் இளைய மகனுக்கு என் இளைய மகள் சோபிகாவை பெண் கேட்பது எனக்கும் சந்தோஷம் தான். நீ சொன்ன மாதிரி இது சம்மந்தமா என் வீட்டுக்காரர்கிட்டேயும் என் மகளிடமும் கலந்து பேசி முடிவு சொல்ல எனக்கு குறைந்த பட்சம் ஒரு வாரம் அவகாசம் கொடு’’ என்று கூறினாள் வசந்தி.

ஒரு வாரம் கடந்து போனது.

வசந்தியிடமிருந்து பதில் எதுவும் விஜயாவுக்கு கிடைக்கவில்லை. வழக்கமாக பால் பண்ணைக்கு நேரில் வந்து பசும் பால் வாங்கிச் செல்ல வசந்தியும் வரவில்லை. இதனால் சற்று பதட்டமடைந்த விஜயா தனது தோழி வசந்தியின் வீட்டுக்கு நேரில் சென்றாள்.

அவள் சென்றபோதுதான் அந்த வீட்டு வாசலில் வந்து நின்ற ஆட்டோவிலிருந்து ஒரு சூட்கேசுடன் இறங்கினாள் வசந்தி.

விஜயாவைப் பார்த்து வசந்தி ‘‘விஜயா!’’ வீட்டுக்குள் வா என்றாள்.

வசந்தியின் சூட்கேசை வாங்கிக் கொண்டு அவளைப் பின் தொடர்ந்தாள் விஜயா. வீட்டுக்குள் நுழைந்து உட்கார்ந்ததும் விஜயாவிடம் பேசினாள் வசந்தி.

‘‘விஜயா!’’ நீ எங்க வீட்டுக்கு வந்து பேசிட்டுப் போன அடுத்த நாள் காலை 8 மணிக்கு மதுரையிலே இருக்கிற எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லேன்னு போன் வந்துச்சு. உடனே நானும் எங்க வீட்டுக்காரரும் மதுரைக்குக் கிளம்பிப் போயிட்டோம். அம்மாவை ஆஸ்பத்தியில் சேர்த்து வைத்தியம் பார்த்தோம். இப்ப அம்மா நல்லா இருக்காங்க. அப்புறம், நீ என்கிட்ட பெண் கேட்ட விஷயம் பத்தி மதுரையில் தங்கியிருந்த போது நானும் என் வீட்டுக்காரரும் பேசினோம். என் வீட்டுக்காரருக்கு இந்த ஜாதி, மதம் வேறுபாடு பார்க்கிறது பிடிக்காது. அதனாலே உன் மகனுக்குப் பெண் கொடுக்க சம்மதம் சொல்லிட்டாரு. திருச்சியிலே வேலை பார்க்கிற என் மகள் சோபிகாவை பாட்டியை வந்து பார்க்கச் சென்னோம். அவளும் மதுரைக்கு வந்தாள். எங்க விருப்பத்தை எடுத்துச் சொன்னோம். உன் மகனை அவளுக்கு தெரிஞ்சதாலே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டாள். பொங்கலுக்குப் பிறகு வருகிற ஒரு முகூர்த்த நாளிலே நிச்சயம் பண்ண முடிவெடுத்தோம்.

தை மாசம்வரும் வளர்பிறை முகூர்த்த நாளிலே கல்யாணம் வச்சுக்குவோம்.

இப்போ உனக்கு சந்தோஷமா?’’ என்றாள் வசந்தி.

‘‘ரொம்ப சந்தோஷம்’’ என்ற விஜயா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *