செய்திகள்

அரசு ஒப்பந்ததாரர், விசிக நிர்வாகி வீடு உள்பட சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை, மார்ச் 9–

வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் சென்னையில் அரசு ஒப்பந்ததாரர் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கும் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரேஷன் பொருள் விநியோக முறைகேட்டில் செல்வராஜ் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. செல்வராஜ் நடத்தும் அருணாச்சலா இம்பாக்ஸ் என்ற நிறுவனம்தான் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அத்தியாவசிய பொருட்களை சப்ளை செய்து வந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7.30 மணி முதல் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

விசிக நிர்வாகி

இதே போல் போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் வீட்டில் காலை 8 மணி முதல் 6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை வேப்பேரியில் போலீஸ் நிலையம் அருகே உள்ள பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தொழில் அதிபர் மகாவீர் இரானி வசித்து வருகிறார். கட்டுமான தொழில் மற்றும் நிதி நிறுவன தொழிலில் ஈடுபட்டு வரும் அவரது வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை வேப்பேரி, பாரிமுனை, தேனாம்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை என 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.

கோவையில்

சோதனை

இதே போல் கோவை ராமநாதபுரத்தில் கியா கார் ஷோரூம் வைத்திருக்கும் அனீஸ் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *