சிறுகதை

ஹீரோ- ஆவடி ரமேஷ்குமார்

மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி.

ஒன்பதாம் வகுப்பு ‘ அ’ பிரிவு.

வருகைப்பதிவை எடுத்து முடித்த ஆசிரியர் வெங்கடேசன் மாணவர்களிடம் இப்படி சொன்னார்.

” எல்லோரும் கவனியுங்க.நாளைக்கு நம்ம ஸ்கூல்ல இன்ஸ்பெக்‌ஷன் நடக்க போகுது.பள்ளிக்கல்வி துறையிலிருந்து மேலதிகாரிகள் இங்க வந்து உங்க படிப்பை பத்தி தெரிஞ்சுக்கப்போறாங்க. அதுக்கு இது வரைக்கும் நடத்தின பாடங்களிலிருந்து சில கேள்விகள் கேட்பாங்க.கேள்விகளை எந்த மாணவரைப் பார்த்தும்கேட்கலாம்.அதனால நீங்க இன்னிக்கே இப்போதிருந்தே

எல்லா பாடங்களையும் படிக்கஆரம்பிங்க.இன்னிக்கு நைட்டும் பரீட்சைக்கு படிக்கிற மாதிரி ஒரு கிளான்ஸ் நல்லா படிச்சிட்டு வந்திருங்க. என்ன புரிஞ்சுதா?”

” சரிங்க சார்” என்றனர் மாணவர்கள் கோரஸாக.

” அப்புறம் நம்ம கிளாஸ்ல இருக்கிற படிக்காத பசங்களெல்லாம்…குறிப்பா…

டேய் ஹரி!…உன்னை மனசுல வச்சிட்டுத்தான் இதை சொல்றேன்.எல்லோரும் நல்லா படிச்சிட்டு வந்திருங்க. என்ன? “

வெங்கடேசன் கேட்க,அனைத்து மாணவர்களும் ஹரியை பார்த்து ‘ ஹா ஹா ஹா’ என்று சிரித்தனர்.

அதை கவனித்த வெங்கடேசன்:

” சபாஷ்! உன் படிப்போட லட்சணம் எல்லோருக்குமே தெரிஞ்சு போச்சா?” என்று

கேட்டு அவரும் சிரிக்க-

மாணவர்கள் மீண்டும் கோரஸாக சிரிக்க-

அவமானத்தோடு திரும்பி திரும்பி அங்கும் இங்கும் திருடனைப்போல் பார்த்து விட்டு தலையை கவிழ்த்துக்கொண்டான் ஹரி.

” நாளைக்கு அதிகாரிகள் வந்து உன்னைய கேள்வி கேட்டா மரம் மாதிரி

நின்னு என் மானத்தை வாங்கிடாதேடா ஹரி…

பிளீஸ்..முடிஞ்ச வரைக்கும் படிச்சிட்டு வந்து தொலை! என்ன?”

தலையை மெதுவாக தூக்கிப்பார்த்து ” சரிங்க சார்”

என்றான் ஹரி வெங்கடேசனிடம்.

மறுநாள்.

இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்த மேலதிகாரி,” பாட சம்பந்தமான கேள்விகளை நான் இப்ப கேட்கப் போறதில்ல. உங்க ஆசிரியர் உங்களை அதுக்கு

பதில் சொல்ற மாதிரி தயார்படுத்தியிருப்பார்னு நான் நினைக்கிறேன்.ஸோ, பொதுஅறிவுக் கேள்வி…

அதுவும் நம்ம ஊரான திருப்பூரை பற்றியது. கேட்கட்டுமா? கேள்வி இது தான். நம்ம ஊரில்

நூலகங்கள் இருக்கிறதா?”

என்று கேட்டார்.

யாரும் பதிலளிக்கவில்லை.

எல்லோரும் இஞ்சியை மென்றது போல் முகத்தை வைத்திருந்தனர்.

” யாருக்குமே இதுக்கு பதில் தெரியாதா?”

மயான அமைதி நிலவ ஆசிரியரை பார்த்தார் அதிகாரி.

அவர் அசடு வழிந்தார்.

” ஓ.கே.செல்லுக் கடைகள் இருக்கிறதான்னு கேட்டிருக்கனும். எத்தனை கடைகள் எங்கெங்கே இருக்குனு புட்டு புட்டு இன்னேரம் வச்சிருப்பீங்க”

அப்போது தயங்கி தயங்கி ஹரி எழுந்து நின்றான்.

” என்னப்பா உனக்கு பதில் தெரியுமா?”

” தெரியும் சார். நம் ஊரில் நூலகங்கள் இருக்கிறது சார்”

” வெரிகுட்! எத்தனை நூலகங்கள் இருக்கிறது?”

” மூன்று சார்”

” வாவ்! ஒன்டர்புல்!போயிருக்கியா அங்க?”

” போயிருக்கிறேன் சார்!”

ஆசிரியர் வெங்கடேசன் உட்பட மாணவர்கள் அனைவரும் பிரம்மிப்பாக ஹரியை பார்த்தனர்.உடனே அதிகாரி ஹரியை நெருங்கிச்சென்று நின்றார்.

” உன் பேர் என்னப்பா?”

” ஹரிப்பிரசாத்”

“நைஸ் நேம். நூலகங்கள் எங்கெங்கே இருக்கிறது தெரியுமா?”

” பார்க் ரோட்ல ஒண்ணு இருக்கு. பழைய பஸ்டேன்ட்க்கு

எதிர்ல மார்க்கெட் ரோட்ல இன்னொண்ணு இருக்கு. மூன்றாவதா அவினாசி ரோட்ல ஈபி ஆபீஸ்க்கு எதிர்ல இருக்கு. அது போக டைமண்ட் தியேட்டருக்கு

அருகில் தனியார் நூலகம் ஒண்ணு இருக்கு சார்”

சட்டென்று தன் சட்டை பாக்கெட்டிலிருந்து விலை உயர்ந்த பேனாவை எடுத்துக் கொடுத்து,” இந்தா இதை உன் பதிலுக்கு என் அன்பு பரிசா வச்சிக்க ஹரி”

என்றார் அந்த அதிகாரி.

பதில் சொல்லாத மற்ற மாணவர்களுக்கு நூலகங்களை பற்றி சில செய்திகள்,அறிவுரைகள் வழங்கிவிட்டு ஆசிரியரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியேறினார் அந்த அதிகாரி.

இப்போது ‘ படிக்காத’ ஹரி அந்த

வகுப்பில் புத்திசாலியாக ஹீரோவாக கொண்டாடப்பட்டான்.

வெங்கடேசனுக்கே இதுக்கு பதில் தெரியாததால் அவர் ஹரியின் பதிலைக்கேட்டு மிகவும் வியந்திருந்தார்.

அவரும் சட்டைப்பையிலிருந்து நூறு ரூபாயை எடுத்து ஹரியிடம் கொடுத்து

” அசத்திட்டேடா ஹரி. இந்தா என் பரிசையும் வச்சுக்க!”

என்று உச்சி முகர்ந்தார்.

அதே சமயம் ஹரி தன் மனதில்

இப்படி சந்தோஷமாக சொல்லிக் கொண்டான்.

‘ அப்பாடா! எங்கப்பாவும் அம்மாவும் இந்த ஊர்ல

லைப்ரரிக்கு வேலைக்கு போறதாலயும் வீட்ல அவங்க அடிக்கடி பேசிக்கிற தாலயும் அவர்கள் எடுத்து வர்ற புத்தகத்தை படிக்கிறதாலேயும்

இன்னிக்கு எப்படியோ சரியான பதிலை சொல்லிட்டேன்.

நான் ‘ ஒரு நாள் ஹீரோ’ ஆயிட்டேன்.

இனி பள்ளிக் கூடப் பாடங்களையும் படிப்பேன்.

நானும் ‘ ஒரு நாள் ஹீரோ’ ஆகிடுவேன். கடவுளே நன்றி!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *