நாடும் நடப்பும்

ஸ்டாலின் திட்டம் வெற்றி!

*பலன் தரும் ஊரடங்கு மேலும் நீடிப்பு

*தட்டுப்பாடின்றி வீடுதேடி வரும் சமையல் பொருட்கள்

கடந்த ஆண்டு இந்த காலக் கட்டத்தில் கொரோனா பரவல் உலகெங்கும் தீவிரம் அடைந்து வந்த நேரத்தில் நகரப் பகுதிகளே பிரதானமாக தாக்கத்தை கண்டது. இரண்டாம் நிலை நகரப் பகுதிகளில் பரவல் அறிகுறிகள் தென்பட்டாலும் கொரோனா பாதிப்பின் அதிகரிப்பு கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

ஆனால் இம்முறை விஞ்ஞானிகளால் இரண்டாம் அலை என்று கூறப்படும் பாதிப்பு நகரங்களிலும் மூன்றாம் நிலை சிறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் தென்படுவது அதிர்ச்சியைத் தருகிறது.

தேசமெங்கும் சென்று வார இறுதி நாளில் ஒரு நாள் பாதிப்பு 1.73 லட்சம் பேருக்கு என இருந்தது. இது ஒரு கட்டத்தில் புதிய உச்சமாக நான்கு லட்சத்தையும் தாண்டி இருந்ததை விடக் குறைவு என்பதை பார்க்கும் போது சற்றே ஆறுதலாக இருக்கிறது.

ஆனால் இம்முறை பாதிப்பு மிக அதிகமாக பின் தங்கிய பகுதிகளில் மருத்துவ சேவைத் துறை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்ற தி.மு.க. அரசு அதிகரித்து வந்த கொரோனா பரவல் வீச்சை கட்டுப்படுத்தியாக வேண்டிய சூழ்நிலை இருந்தது.

நிலைமையை உணர்ந்தே முதல்வர் ஸ்டாலினும் தனது முதல் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி பகுதிகளுக்கு சென்று பணிகள் நடைபெறுகிறதா? என்பதை நேரில் சோதனை செய்து கொரோனா பணிகள் போர்க்கால அடிப்படையில் வேகமாக்குவதற்கான ஏற்பாடுகளை சீர் செய்தார்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை நகரம் பாதிப்பில் குறைந்து வருவதாலும் பல பின்தங்கிய பகுதிகள் பாதிப்பு அதிகரிப்பதையும் கண்டு நிலைமையை சீர் செய்ய பல உத்தரவுகளைப் பிறப்பித்தார். கூடவே தனது ஆலோசனைகள் சரிவர செயல்படுத்தப்பட்டும் வருகிறதா? என்பதை தெரிந்து கொள்ளவும் முனைந்தார்.

அதன் காரணமாகவே நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் திருப்பூர், ஈரோடு, கோவை பகுதிகளில் மீண்டும் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

கோவிட் –19 வைரஸின் பரவல் நிறுத்த ஒரே வழி சமூக விலகல் என்பதைப் புரிந்து கொண்ட ஸ்டாலின் நாடெங்கும் பல்வேறு மாநிலங்களில் உள்ள ‘முழு ஊரடங்கு’ என்ற முறையை தமிழகமெங்கும் அறிவித்தார், அதை இம்முறை மீண்டும் அடுத்த திங்கள் அதாவது ஜூன் 7 வரை நீடித்துள்ளார்.

தற்போது சென்னை நகரில் தொற்றின் பரவல் குறைந்தது. கூடவே தடுப்பூசி போடுவது கடந்த வார இறுதியில் கணிசமாகவே அதிகரித்து வருகிறது.

18 வயது தாண்டிய இளைஞர்கள் எல்லோரும் மிக ஆவலுடன் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளத் தயாராகி விட்டாலும் இரண்டாவது தவணையைப் பெற இருப்போருக்கே தற்போது முன்னுரிமை என்பதால் அடுத்த வார முதல் தான் அந்த அடுத்த தலைமுறை இளைஞர்கள் தடுப்பூசியைப் பெற ஆரம்பித்து விடுவார்கள்.

தட்டுப்பாட்டில் பாதிப்பு

கடந்த வார இறுதியில் நாடு முழுவதும் நேற்று 1,73,790 பேருக்கு மட்டுமே பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த 16 நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரைவிட குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,84,601 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2.51 கோடியாக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 22,28,724 ஆக குறைந்துள்ளது.

மேலும் முழு ஊரடங்கு ஜூன் 7–ந் தேதி வரை தமிழகத்தில் நீடிக்கப்பட்டு இருப்பதால் இல்லங்களில் மளிகைப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் அதிகரித்து வருவதை உணர்ந்து முதல்வர் ஸ்டாலின் கடைகளை ஒரு சில நாட்கள் திறந்தால் பெரும் ‘ரிஸ்க்’ என்பதை உணர்ந்து, சிறு மளிகை கடைக்காரர்களை தங்களிடம் தள்ளு வண்டியோ, சைக்கிளோ வைத்து இருந்தால் அதைக் கொண்டு அந்த பகுதிகளில் வீட்டிற்கு சாமான்களைத் தரலாம் என்று அறிவித்துள்ளார், அத்திட்டமும் இன்று துவங்கி விட்டது.

கடை வீதிகளில் பொது மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்பாட்டில் இப்படி வைத்து இருப்பதால் ஒரு சிலரே நடமாட முடியும்! ஆக தொற்றின் சங்கிலி அறுபடுவதுடன் குடும்பங்கள் தட்டுப்பாடுகளால் திண்டாடமாட்டார்கள்.

தட்டுப்பாடின்றி சமையல் பொருட்களை மக்களுக்கு அவர்கள் வீடுகளிலேயே கொண்டு போய் விற்கச் செய்த முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம் வெற்றிபெற்றிருக்கிறது . அது பாராட்டுக்குரியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *