செய்திகள்

வீட்டில் அடைந்து கிடந்தாலும் போர் அடிப்படைத் தவிர்க்க ஆன்லைன் மூலம் ‘இசை, நாட்டிய’ வகுப்பு

Spread the love

சென்னை மார்ச் 26–

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது.

விழித்திரு, தனித்திரு, வீட்டில் இரு… என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாட்டு மக்களுக்கு டெலிவிஷன் மூலம் விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று மக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.

வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே அடைந்து கிடந்து போர் அடிப்பதை தவிர்க்க அவர்களும் தங்கள் பொழுதை இனிமையாகக் கழிக்க இப்பொழுது ஆன்லைன் மூலம் பழகிக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

நடைப்பயிற்சிக்கு வெளியே போக முடியாது, அலுவலகப் பணிக்கு வெளியே போக முடியாது வீட்டில் 21 நாட்கள் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று உருவாகி இருக்கும் இந்த தவிர்க்க முடியாத சூழ்நிலையில், தொழில்நுட்ப துறை இவர்களுக்கு பெரிதும் கை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை பார்க்கும் நபர்கள் அலுவலக கூட்டங்கள் மற்றும் வாடிக்கையாளர் சந்திப்பு, கலந்துரையாடல் ஆகியவற்றை ஆன்லைன் வீடியோ மூலம் நடத்துவதைப் போல… வீட்டில் முடங்கி இருக்கும் மக்களும் ஆன்லைனில் – வீடியோ மூலம் தங்கள் குடும்பத்தினர் – உறவினர்கள் , நண்பர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி வருகிறார்கள்.

24 மணி நேரமும் வீட்டில் அடைந்து கிடக்கும் அவர்கள் வீடியோ மூலம் யோகா , பாட்டு , நாட்டிய வகுப்புகளிலும் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

தொழில்நுட்பத்துறையில் இருப்பவர்கள் – அதாவது சாப்ட்வேர், ஹார்ட்வேர் என்ஜினியர்கள் விஷயத்தில் இது அவர்களது வாடிக்கையான ஒன்றாக இருக்கலாம். ஆனால் வீடியோ மூலம் இதுமாதிரி ஆன்லைன் கலந்துரையாடல் நுண்கலைகள் பயிற்சி பெறுவதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்னும் 15 நாட்களில் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஆன்லைன் மூலம் கலந்துரையாடலில் பயிற்சி வகுப்புகளில் தங்களை தயார் செய்து கொள்ளும் அனுபவம் பெற்று விடுவார்கள். ஒருபக்கம் உயிர்கொல்லி வைரஸ் விஷயத்தில் பயந்துகொண்டு முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டாலும்… இன்னொரு பக்கம் ஆன்லைன் மூலம் பாடம் படிக்கும் ஆதாயமும் இவர்கள் அடைந்து இருப்பது வரவேற்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *