நாடும் நடப்பும்

விளையாட்டு சுற்றுலாவின் சிக்கல்

நேற்று இறுதி ஓவர் வரை வந்து இந்திய அணி வலுவான இங்கிலாந்து அணியை டி 20 ஆட்டத்தில் வென்று தொடரை 2 2 என்று சமன் செய்ததால் மர்ம கதையில் இறுதி வரை நீடிக்கும் மர்மம் போல் ‘யாருக்கு வெற்றிக் கோப்பை’? என்ற கேள்வி நீடிக்கிறது.

இறுதி போட்டி மார்ச் 21 அன்று அதே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பார்வையாளர்களின்றி நடைபெறும்.

விளையாட்டு வீரர்கள் அனைவரும் ‘பையோ பபிள்’ (Bio Buffle) அதாவது பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் வெவ்வேறு ஊருக்கு பறந்து சென்று விளையாடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு ஆட்டங்களுக்கு ரசிகர்களின் வருகை அனுமதிக்கப்பட்டு இருந்தது, ஆனால் தொற்று பரவல் அச்சம் தரும் அளவிற்கு அதிகரித்து வரும் நிலையில் தீவிர ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்பட்டு இருப்பதால் பார்வையாளர்கள் அனுமதி கிடையாது.

பரபரப்பான ஆட்டங்களை டிவியில் மட்டுமே பார்த்து ரசிக்க முடிகிறது. என்றாலும் பரபரப்பான கட்டங்களில் ரசிகர்களின் ஆரவார மவுனங்களின் அழுத்தம் தானே கிரிக்கெட்டின் உண்மையான முகம்!

அதுயில்லாது ஆடுகளத்தில் நடக்கும் பரபரப்பு ஏதோ அன்றாட ஆட்டம் போன்று தான் இருப்பது கவலை தருகிறது. குறிப்பாக இந்தியாவை வீழ்த்தி விட்டால் தொடரை வென்றுவிட்ட மகிழ்வுடன் இறுதி ஆட்டத்தில் களம் இறங்கியிருப்பார்கள் இங்கிலாந்து அணி!

அதுபோன்றே இந்தியாவிற்கும் நேற்றைய ஆட்டம் வாழ்வா? சாவா? என்று இருந்த நிலையில் புதுமுக ஆட்ட நாயகன் சூரியகுமார் சிக்சர் அடித்து தனது ஆட்டத்தை துவக்கிய விதம் விரைவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் அணியில் இவருக்கும் ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது.

இப்படிப்பட்ட நிகழ்வுகளை நேரில் இருந்து ரசிக்கும் ரசிகர்கள் இன்றி இறுதி ஆட்டம் நடைபெறுவது கவலை தந்தாலும் விளையாட்டு உலகம் ரசிகர்களின் ஆரவாரம் ஏதுமின்றி திறமையை வெளிப்படுத்துவது சமீபமாக வாடிக்கையாகிவிட்டது!

ஜூலை மாதத்தில் ஜப்பானில் ஒலிம்பிக்ஸ் நடைபெறும் போது போட்டியாளர்கள் தவிர வெளிநாடுகளில் இருந்து வரும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

உள்ளூர் ரசிகர்களுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்துள்ளனர். ஆக, வேகம், உயரம், பலம் என்ற மூன்று அம்சங்களிலும் யார் முதன்மை என்பதை வெளிப்படுத்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க வரும் வீரர்களுக்கு ஊக்கம் தரும் அறிவார்ந்த ரசிகர்கள் இருக்க மாட்டார்கள்!

உலகெங்கும் இரண்டாம் அலையாக கொரோனா கிருமி அவதாரம் எடுத்து பரவி வரும் நிலையில் கூட்டங்கள் கூடுவது சரியில்லை தான். ஆகவே விளையாட்டு மைதானங்களில் ரசிகர்களுக்கு தடை சரி தான்.

டிவி, ஆன்லைனில் விபரங்களை எல்லாம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வசதிகள் இருப்பதால் இந்த தடையால் ஆட்டத்தின் மீதான மோகம் குறைந்து விடப்போவதுயில்லை.

ஆனார் ஐபிஎல், உலக கோப்பை, ஒலிம்பிக்ஸ் போன்ற ஆட்டங்கள் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் நடப்புகள் ஆகும். ஸ்டேடியத்தில் செய்யப்படும் விளம்பரங்கள் அந்த போட்டிகளை நடத்தும் அமைப்புகளுக்கு மிகப்பெரிய வருமானமாகும்!

இன்றோ பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் ஒலிம்பிக்ஸ் நடத்தும் ஜப்பானில் வருவாய் ஏதுமின்றி நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டி நஷ்டத்தில் நடைபெறும்.

விமான டிக்கெட், தங்கும் வசதிக்கான முன் பதிவு போன்ற பலவற்றை திரும்ப தரும் நிலையில் கையிருப்பு மிக குறைந்து அவர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார பாரமாகவே இருக்கும்.

சிறுசிறு சுற்றுலா பயண ஏஜெண்சிகள் எல்லாம் ரத்தாகிவிட்டதால் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப தருவதில் சிரமப்பட்டு கொண்டிருப்பதை பார்க்கும்போது உலக கோப்பை கிரிக்கெட், ஒலிம்பிக்ஸ் போன்ற விளம்பர பொருளாதார விவகாரங்களை இந்த ஆண்டின் இறுதிக்கு மாற்றுவதை பற்றி யோசிப்பதும் சரியாக இருக்கக் கூடும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *