செய்திகள் நாடும் நடப்பும்

விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம்; ஸ்டாலின் முயற்சிக்கு கைமேல் பலன்!

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 74 பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு


ஆர். முத்துக்குமார்


இந்தியாவின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும், தேசிய விளையாட்டுப் போட்டிகள் 1924 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடத்தப்படுகிறது. 35 வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2015 ஆம் ஆண்டில் ஜனவரி 31 ந்தேதி தொடங்கி பிப்ரவரி 14 ந்தேதி வரையில் கேரளாவில் நடைபெற்றது. அதன் பிறகு கோவிட்–19 உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போன 36 வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் குஜராத் மாநிலத்தில் செப்டம்பர் 29 ந்தேதி தொடங்கி, அக்டோபர் 12 ந்தேதியுடன் நிறைவடைந்தது.

இந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு அணி பெரிய அளவில் சாதித்துள்ளது. அதற்கு காரணம், முதலமைச்சர் ஸ்டாலின் விளையாட்டுத் துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்று உறுதியாக கூறலாம். உலகமே வியக்கும் வண்ணம், சென்னையில் ‘செஸ்’ ஒலிம்பியாட் போட்டிகளை அண்மையில் தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக நடத்தி பாராட்டை பெற்றது. அதில் பங்கு பெற்ற செஸ் வீரர், வீராங்கனைகள் இதுபோல் சிறப்பான ஒரு ஏற்பாட்டை நாங்கள் வேறெங்கும் பார்க்கவில்லை என்று சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டிருந்தனர்.

கைமேல் பலன்

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுக்கும் எந்த ஒரு செயலையும் திறம்பட செய்து முடிக்கக் கூடியவர் என்பது, அவர் சென்னை மாநகராட்சி மேயராக பொருப்பேற்ற காலம் தொட்டே தமிழ்நாடு அறிந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்றதும், கல்வித்துறை, மருத்துவத்துறை என ஒவ்வொரு துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து, சிறப்பாக செயல்படும் அமைச்சர்களையும் நியமித்தார்.

அதேபோல் விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாடு சிறந்து விளங்க, ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டு, வீரர் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் திட்டங்களையும் அறிவித்து நிதியையும் ஒதுக்கினார். அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது என்றே கூற வேண்டும்.

2015 ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற 35 வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு அணி 16 தங்கம், 16 வெள்ளி, 20 வெண்கலம் என 52 பதக்கங்களை வென்று 8 வது இடம்தான் பிடித்திருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசும் முதலமைச்சர் ஸ்டாலினும் விளையாட்டுத் துறைக்கு கொடுத்த முக்கியத்துவம் காரணமாக, குஜராத்தில் நடைபெற்ற 36 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் 20 பிரிவுகளில் பங்கேற்ற தமிழ்நாடு அணி வீரர்கள், 25 தங்கம் உள்ளிட்ட 74 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 3 இடங்கள் முன்னேறி, தமிழ்நாடு 5 வது இடத்தை பிடித்துள்ளது.

கோவாவில் 2023 இல் போட்டி

அதேவேளை, கேரள அணி 2015 ஆம் ஆண்டில் 54 தங்கம், 48 வெள்ளி, 60 வெண்கலம் என மொத்தம் 162 பதக்கங்களை வென்று 2 வது இடத்தில் இருந்தது. ஆனால், குஜராத்தில் தற்போது நடைபெற்ற 36 வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 23 தங்கம், 18 வெள்ளி, 13 வெண்கலம் என 54 பதக்கங்களை மட்டுமே வென்று கேரளா 6 வது இடத்திற்கு பின்தங்கி உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த போட்டிகளில் வழக்கம் போல் ராணுவத்தின் சர்வீசஸ் அணி முதலிடத்தை பிடித்துள்ளது. அது 61 தங்கம் உள்ளிட்ட 128 பதக்கங்களை வென்றுள்ளது. 2015 ஆம் ஆண்டு 30 தங்கம் உள்பட 123 பதக்கங்களை வென்று 4 வது இடத்தில் இருந்த மகாராஷ்டிரா அணி, தற்போது 39 தங்கம் உள்ளிட்ட 140 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அரியானா அணி கடந்த போட்டியைப் போலவே 3 வது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. அதேவேளை 11 வது இடத்தில் இருந்த கர்நாடகா அணி 4 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

அடுத்த 37 வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 வது ஆண்டில் அக்டோபர் மாதம் கோவா மாநிலத்தில் நடைபெற உள்ளது. அப்போது தமிழ்நாடு சார்பாக பங்கேற்கும் வீரர்கள் மேலும் சிறப்பாக பங்காற்றி, பதக்கங்களை வென்று முதல் 3 இடங்களுக்குள் வருவார்கள் என்று உறுதியாக நம்பலாம். அதற்காக, தமிழ்நாடு அரசும் முன்னெடுக்க வேண்டும் என்று கூறி, வாழ்த்துகளையும் தெரிவிப்போம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *