சிறுகதை

விருந்தோம்பல் – ராஜா செல்லமுத்து

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலக தத்துவத்தை உள்ளடக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறான் தமிழன். வீட்டிற்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் முதலில் தண்ணீர் கொடுத்து உபசரிப்பது தமிழர்களின் வழக்கம்.

இப்படிப்பட்ட பாரம்பரியத்தில் மரபு மீறாமல் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு இடையில் இன்னாசி ஒரு வித்தியாசமாக தெரிந்தான்.

அவன் வீட்டு முன்பு வாசலை சுற்றி பெரிய பெரிய கற்களையும் உடைந்த சேர்களையும் வட்டமாக அடுக்கி வைத்திருந்தான்.

அந்தக் கல் வட்டத்திற்குள் கோலம் ஒன்று அழகாக சிரித்துக் கொண்டிருந்தது.

இன்னாசி வீட்டுக்கு எதிர் வீட்டிற்கு சென்ற அழகிரி இதைப் பார்த்து ஆச்சரியம் கொண்டான்.

என்ன இது? வீட்டு வாசல சுத்தி இப்படி கல்லும், உடைந்த சேர்களுமா அடுக்கி வச்சிருக்காங்க. அதுக்குள்ள ஒரு அழகான கோலம் என்று சொல்லிக்கொண்டே அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தான் அழகிரி.

மேலே அசோகச் சக்கரம் பொறித்த ஒரு தேசியக்கொடி பறந்து கொண்டிருந்தது. உயர்த்திய தலையை கீழே தாழ்த்துவதற்குள் அழகிரியை தொட்டார் ஒரு பெரியவர்.

என்ன தம்பி இங்க அடுக்கி வச்சிருக்கிற கல்லையும் மேல இருக்கிற தேசியக்கொடியும் பாத்துக்கிட்டு இருக்குறியே? என்று எள்ளல் கலந்த சிரிப்பில் கேட்டார் அந்தப் பெரியவர்.

இல்ல எதுக்காக என்று இழுத்தார் அழகிரி.

நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு தெரியும் தம்பி. இந்த வீட்டில இருக்கிறவரு பேரு இன்னாசி. தன்னை ஒரு பெரிய தேசியவாதியா காட்டுகிற ஒரு மனுஷன். ஆனா வீட்டு முன்னாடி எந்த வண்டியும், மனுசனும் நிக்கக்கூடாது அப்படிங்கறதுக்காக, சுத்தி கல்ல அடைச்சு வச்சிருக்கான். உடைந்த சேர்களையும் போட்டு வச்சிருக்கான். இதுதான் அவனுடைய தேசியம்.

அவன் வீட்ல போட்டு இருக்கிற கோலம் கூட ஒரு சிறையில அடைபட்டது மாதிரி தான் இருக்கு. அதைவிட சுதந்திரமா பறக்கிற தேசிய கொடி இந்த வட்டத்தை பார்த்து விக்கி தலைகுனிச்சு நிக்குது. இதுதான் இன்னாசியோட தேசியம் என்று அந்த பெரியவர் சொன்னபோது தன் இரு சக்கரத்தில் வந்த அழகிரி அதை ஒரு வியப்பாக பார்த்துவிட்டு தான் வந்த அலுவலகத்திற்குள் நுழைந்தான்.

இப்படி ஒரு விஷயத்தை காட்சியை இதுவரை அழகிரி கண்டதில்லை.

என்ன மனிதர்கள், மனிதனோ வண்டியோ கொஞ்ச நேரம் நிழலில் நிக்கிறதுனால இந்த மனுஷனுக்கு என்ன ஆயிடப்போகுது? அது கூட செய்யறதுக்கு மனசு இல்லாம கல்லையும் ஒடஞ்சு சேர்களையும் சுத்தி வச்சிருக்கான்.

இதுல பெருமையா தேசியக் கொடிய வேற பறக்க விட்டுட்டு இருக்கான். இந்த மாதிரி கல்நெஞ்சு உள்ள மனுஷங்களுக்கு எப்படி தேசியம் வரும் தேசியம்கிறது இனம், மொழி, ஜாதி, மதம் கடந்தது. மத்தவங்கள எல்லாம் அனுசரிச்சு போகணும், அப்படிங்கறது தான தேசியக்கொடியோட அர்த்தம்.

ஆனா இவன் இப்படி சுத்தி அடச்சு வச்சுக்கிட்டு, தன்ன ஒரு தேசியவாதியா காட்டுகிறது ரொம்ப அபத்தம் என்று நினைத்துக் கொண்டே அலுவலகத்தில் நுழைந்தான் அழகிரி.

சிறிது நேரத்திற்கு எல்லாம் இன்னாசி வீட்டுக்கு முன் ஒரு ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது.

அந்த தெரு வழியாக யாருக்கு பிரச்சனை என்று முகவரி தெரியாமல் நின்று கொண்டு இருந்த அந்த ஆம்புலன்சுக்கு வழியில்லாமல் திணறினான், டிரைவர்.

இன்னாசி தன் வீட்டு வாசலில் கற்களை அடைத்து வைத்திருந்தான்.

மனுஷனா அண்டாத முள்ளு முளைச்ச ஆளா இருப்பான் போல யார் இவன் என்று திட்டிக் கொண்டே அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் இறங்கினார்.

ஆனால் இன்னாசிக்கு தான் உடம்பிற்கு முடியாமல் போய் வீட்டுக்குள் இருந்து தூக்கி வந்தார்கள்.

கற்கள் அடைக்கப்பட்ட அந்த வாசலுக்குள் செல்ல முடியாமல் இருந்தது ஆம்புலன்ஸ்.

இந்த கல்லு மட்டும் இல்லாம இருந்தா நேரா வாசலுக்கே வந்து இருக்கும் ஆம்புலன்ஸ்.

இந்நேரம் தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு பறந்து இருக்கலாம். இப்ப பாருங்க நீங்க கல்ல அடைச்சு வச்சதுனால வாசலுக்கு வர முடியல. வண்டியும் திருப்ப முடியல. நீங்க யாரையோ நிராகரிக்கிறோம்னு நினைச்சு இந்த கல்லு எல்லாம் உங்க வீட்டு வாசல் மாதிரி வச்சீங்க.

ஆனா கடவுள் பாருங்க உங்கள நிராகரித்துட்டான் கொஞ்சம் பொறுங்க என்று சொன்ன அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் வண்டியை வளைத்து வருவதற்கு நேரம் எடுத்தது.

சார் சீக்கிரம் எடுங்க அப்பாவுக்கு உடம்பு எல்லாம் வேர்க்குது. சீக்கிரம் சீக்கிரம்… என்று கத்திக் கொண்டிருந்தான் இன்னாசி மகன்.

தம்பி வீட்டு வாசல் பூரா கல்ல அடுக்கி வச்சிருக்கீங்க. கொஞ்சம் பார்த்து தான் திருப்பணும் என்று அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் திருப்பி வண்டியை எடுத்துக் கொண்டு வந்து சற்று தூரத்தில் நின்ற போது இன்னாசியை ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.

தம்பி பாத்திங்களா நீங்க செய்றது எதுவும் அந்த பலன அடுத்த ஜென்மம்ல இல்ல இந்த ஜென்மத்திலேயே அனுபவிக்கனும் அப்படிங்கறது ஊர்ஜிதம் ஆயிடுச்சு.

மத்தவங்களுக்கு கஷ்டத்தை கொடுத்தீங்க. ஆனா இப்ப உங்களுக்கே எவ்வளவு கஷ்டமா போச்சு தெரியுமா?

மனுசங்களோட சேர்ந்து வாழ்றதுதான் நல்ல வாழ்க்கை. இங்கு யாரும் 200 வருஷத்துக்கு இருக்க போறது இல்ல. சேத்த சொத்தையும் சம்பாதித்த பணத்தையும் எடுத்துட்டு போறதும் இல்ல.

சண்டையோ சத்தமோ சந்தோஷமோ துக்கமோ பகிர்ந்துக்கோங்க. அப்பதான் இந்த மனித வாழ்வை சிறக்கும் என்று தத்துவம் சொன்னார் அந்த ஆம்புலன்ஸ் டிரைவர்.

நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருந்த இன்னாசி சட்டனெத் திரும்பினான்.

தம்பி கொஞ்சம் வண்டியை திருப்புங்க என்றான்.

என்ன ஆச்சு?

இல்ல வண்டிய திருப்புங்க என்று அழுத்தமாகச் சொன்னான்.

இன்னாசி என்னவோ ஏதோ என்று ஆம்புலன்ஸைத் திருப்பினார் டிரைவர்.

அப்பா இப்ப என்னப்பா உனக்கு ஆஸ்பத்திரிக்கு போயிட்டு அப்புறமா வீட்டுக்கு போகலாம்

என்ற போது

இல்லடா வண்டிய திருப்ப சொல்லு என்று கட்டளை இட்டான் இன்னாசி.

சரி வண்டிய திருப்பங்க என்று இன்னாசியின் மகன் சொன்னதும்

மறுபடியும் இன்னாசியின் வீட்டு முற்றத்தில் வந்து நின்றது அந்த ஆம்புலன்ஸ்.

அதுவரையில் வலியில் துடித்துக் கொண்டிருந்த இன்னாசி சட்டென இறங்கி வீட்டு வாசல் முன்னால் குவித்து வைக்கப்பட்ட கற்களையும் அடுக்கி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் சேர்களையும் எடுத்து துற வீசினான்.

அதுவரையில் நெஞ்சு வலியில் துடித்துக் கொண்டிருந்த இன்னாசி எப்படி இந்த வேலையை செய்கிறார்? என்று டிரைவருக்கும் இன்னாசி மகனுக்கு வியப்பாக இருந்தது.

அத்தனையும் அப்புறப்படுத்தி விட்டு எழுந்தார்.

அரை மணி நேரத்திற்கு முன்னால் இருந்த நெஞ்சு வலி இப்போது காற்றில் கரைந்திருந்தது.

அப்பா ஆஸ்பத்திரி போலாமா? என்று இன்னாசி மகன் கேட்க

இப்ப வலி இல்லப்பா. நல்லா இருக்கு ஆம்புலன்ஸ் அனுப்பிடலாம் என்று இன்னாசி சொன்னபோது

இது எதற்கும் பதில் சொல்லாமல் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் இன்னாசி வீட்டு வாசல் முன்னால் அகற்றப்பட்ட கற்களையும் பிளாஸ்டிக் சேர்களையும் பார்த்து புன்முறுவல் பூத்தபடியே

சார் ஒடம்ப பாத்துக்கோங்க. எப்ப கூப்பிட்டாலும் டானு வந்து உங்க வாசல் முன்னாடி இருப்பேன் எதுக்கும் பயப்படாதீங்க சார் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு பறந்தார் ஆம்புலன்ஸ் டிரைவர்.

இப்போதுதான் வாசலில் போடப்பட்டிருந்த கோலத்திற்கும் வீட்டு மாடியில் கட்டி இருந்த தேசியக் கொடிக்கும் விடுதலை கிடைத்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *