செய்திகள்

விக்கிரவாண்டி ஒன்றியத்தில் குடிநீர் திட்டப் பணிகள்: விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு

Spread the love

விழுப்புரம், ஜூலை 20-

விக்கிரவாண்டி ஒன்றியத்தில் குடிநீர் பணிகள், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் விக்கிரவாண்டி ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், குடிநீர் விநியோகம் குறித்து மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம், தூய்மை பாரத இயக்கத் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொன்னங் குப்பம் ஊராட்சியில் பொது நிதித் திட்டத்தின் கீழ் ரூ.16.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் திறந்த வெளிக் கிணற்றையும், கொட்டியாம்பூண்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9.97 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமுதாய ஆழ்கிணற்றையும், அய்யூர் அகரம் ஊராட்சி சிந்தாமணி கிராமத்தில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி கிணற்றையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தப் பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சுந்தரேசன், உதவி செயற்பொறியாளர் ஜோதிவேல், ஊராட்சி உதவி இயக்குநர் ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், அறவாழி, பொறியாளர்கள் சோமசுந்தரம், ஜான்சிராணி, ஜெயலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *