சிறுகதை

வாரிசுகள் | ராஜா செல்லமுத்து

‘‘குடும்பச் சொத்தை பிரிச்சுக் கொடுங்க…’’

வழக்கம்போல அன்றும் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு இருந்தான் கணேஷ். ‘‘உன்னத்தான் படிக்க வச்சாச்சு. அதுக்குத் தகுந்த மாதிரி வேலை வாங்கிக்கிட்டு போகாம இன்னும் குடும்பத்து சொத்து கேட்டுக் கொண்டிருக்கிறது நியாயம் இல்ல. உன்ன பெத்தோம்; படிக்க வச்சோம்; அதோட எங்க கடமை முடிஞ்சு போச்சு. அதுக்கப்புறம் சம்பாதிக்கிறது உன்னோட கடமை. அது உன் கையில தான் இருக்கு. அத விட்டுட்டு குடும்பச் சொத்தை பிரிச்சு கேட்கிறது முறை இல்ல ’’என்று கணேஷின் அப்பா பொன்னுசாமி மகனை திட்டிக் கொண்டு இருந்தார் .

‘‘அதெல்லாம் முடியாதுப்பா. நான் பார்க்கிற வேலை எனக்கு பிடிக்கல. சம்பளம் கொஞ்சம். அதை விட இன்னும் வசதியா வாழ நினைக்கிறேன். அதுக்கு இந்த சம்பளம் பத்தாது. நீங்க வயசான காலத்துல உங்களுக்கு எதுக்கு சொத்து பேங்க் பேலன்ஸ்; எனக்கு குடுங்க. வாழ வேண்டிய வயசுல வாழலாம சாப்பிடவே முடியாம இருக்கிற காலத்துல சேர்த்து வைத்த பணத்தை வச்சு ஒன்னும் செய்யப்போறதில்லைப்பா. நல்லா சாப்பிடணும். நல்ல சந்தோசமா இருக்கணும். ஆடம்பரமா வாழனும் . அதுதானே வாழ்க்கை. அத விட்டுட்டு எல்லாத்தையும் மிச்சம் பிடிச்சு என்ன செய்யப் போறீங்க.? ’’என்று கணேஷ் தன் பங்குக்கு பேசினான்.

‘‘ டேய்…. இதெல்லாம் என்னுடைய சொத்து இல்லடா. எங்கப்பா சம்பாதிச்சது. வாயைக் கட்டி வயித்தைக் கட்டி, சம்பாதிச்சது. அதனால தான் இன்னைக்கு நீங்க, நான் உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கிறோம். உன்ன மாதிரி ஊதாரித்தனமாக செலவாளியா இருந்திருந்தா நீயும் நானும் இந்நேரம் ரோட்டில தான் இருந்திருப்போம் ’’என்று மறுபடியும் சொன்னார் பொன்னுசாமி .

இந்தச் சொத்திலிருந்து, ஒரு காசு தர மாட்டேன்.நீ உழைத்து சாப்பிடு. உனக்கு என்னென்ன தேவையோ? அதை நீயே எடுத்துக்கோ ?அதை விட்டுட்டு சொத்தை எல்லாம் பிரிக்க முடியாது என்று பொன்னுசாமி கணேஷிடம் சொன்னார்.

சட்டம் தெரியுமா உனக்கு ? தாத்தா சம்பாதிச்சது எனக்குத்தான் சொந்தம். உங்க தாத்தா சம்பாதிச்சது தான் உனக்கு சொந்தம். இது எங்க தாத்தா சம்பாதிச்சது; எனக்குத்தான் சொந்தம் என்று மறுபடியும் மறுபடியும் முரண்பாடாக பேசிக்கொண்டிருந்தான் கணேஷ் .

டேய்… நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். என்னடா வரம்பு மீறி பேசிக்கிட்டு இருக்க. அதான் உன்னை பெத்து வளர்த்து படிக்க வைக்க எவ்வளவு கஷ்டப் பட்டோம் . இனி நீ சம்பாதிக்க வேண்டியது தானே? அதை விட்டு விட்டு குடும்ப சொத்தைக் கேட்டுட்டு இருக்க. அது அசிங்கமா இல்ல உனக்கு? என்று பேசிக்கொண்டே வந்தாள் அம்மா

இல்லம்மா நீங்களும் சாப்பிட மாட்டீங்க. சாப்பிட வேண்டியவர்களை சாப்பிடவும் விட மாட்டீங்க. இவ்வளவு சொத்து எதுக்குமா? இது என்ன பண்ண போறீங்க? ஒன்னும் செய்யப்போறதில்ல. மனிதனுடைய வாழ்க்கை ரொம்ப சிறுசும்மா .இருக்கிற வரைக்கும் சந்தோசமா இருக்கணும். நல்லா சாப்பிடணும். ஜாலியா இருக்கணும் . சொத்த என்ன செய்யப் போறீங்க? என்று மறுபடியும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தான் கணேஷ் .

சண்டை ஒரு முடிவுக்கு வராமல் முற்றிக் கொண்டே இருந்தது.

எனக்கு மாசா மாசம் அஞ்சு லட்சம் பணம் தரனும். அதோட நான் எப்ப காசு கேக்கணும்னு நினைக்கிறேனோ அப்ப எல்லாம் தரணும். அப்படின்னா நான் எப்பவுமே உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். இல்லன்னா சொத்தைப் பிரிச்சு கொடுங்க . நான் வந்து என்னுடைய சம்பாத்தியத்தில என்னுடைய செலவுல என்னுடைய பணத்தை செலவழிக்கிறேன். ஒவ்வொரு நேரம் உங்ககிட்ட கேக்குறதுக்கு எனக்கே அசிங்கமா இருக்கு. என்னோட சொத்த வச்சு நான் சம்பாதிக்கிறேன். செலவிடுவேன். உங்ககிட்ட நான் ஒரு காசு கேட்க மாட்டேன் என்று மறுபடியும் தன் பக்கம் உள்ள நியாயத்தை சொன்னான் கணேஷ்.

சரிடா ஏன் உனக்கு படிப்புதான் இருக்குல்ல. அந்த படிப்ப வச்சு சம்பாதிக்க வேண்டிய தானே ?செலவழிக்க வேண்டியது தானே? அதை விட்டு விட்டு மறுபடி மறுபடி அதையே கேட்கிற என்று பொன்னுசாமி கேட்டார்.

ஏங்க இவன் கூட சண்டை போட்டுட்டு இருக்கீங்க? சொத்த பிரிச்சு கொடுங்க என்று அம்மா சொன்னாள்.

பொன்னுசாமி அதற்கு மேல் எதுவும் பேசாமல் இருந்தார்.

மகனுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுப்பதில் ஒரு மனதாக சரி என்று அவருக்குப் பட்டது. ஆனாலும் இது அவன் சம்பாதித்த சொத்து இல்லையே? என்னுடைய அப்பன் சம்பாதித்த சொத்து. இதை ஊதாரித்தனமாக செலவழிக்கிறத நான் விட மாட்டேன் என்றவர் மனதில் எண்ணினாலும் மகனின் தொந்தரவு தாளாமல் சொத்தை பிரித்து கொடுப்பதற்கு முன் வந்தார்.

அந்த இரவு முழுவதும் அவருக்கு தூக்கமே வரவில்லை. நன்றாக இருந்த குடும்பத்தில் ஆடம்பரம், பணம் வந்து தன் குடும்பத்தை கெடுத்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருந்தார் பொன்னுசாமி.

அன்று இரவு தூங்காமல் மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தவர், கண்ணில் ஒரு காட்சி தென்பட்ட அந்த காட்சியை பார்த்த பொன்னுசாமிக்கு மனுஷங்களே இப்படித்தான். மிருகங்கள் அப்படி இல்லையே ?என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்தார்.

அந்தத் தெருவில் அவர் வழக்கம்போல பார்க்கும் நாய்க்குட்டி இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால் குட்டி போட்டிருந்தது. அது தன் தாயிடம் பால் குடிக்கும் வரை, மகனாக மகளாக இருந்தது. கொஞ்சம் வளர்ந்ததும் தாயை விட்டு பிரிந்து ஓடியது. அந்தக் குழந்தைகளை அந்த பெரிய நாயும் அதாவது தாய் நாயும் சட்டை செய்யவில்லை. வளர்வது வரைக்கும் தான் தன் பிள்ளைகள் என்று நினைத்துக்கொண்டு இருந்த அந்த நாய் வளர்ந்த பிறகு அவை ஓடினது பற்றி சற்றும் கவலைப்படாமல் இருந்தது.

அடுத்தவர்கள் நிழலில் வாழக்கூடாது என்று அந்த தாய் நாய் நினைத்தது. அம்மாவின் நிழலில் வாழக்கூடாது அம்மாவின் வழிகாட்டுதலில் அம்மாவின் சொத்தில் இருக்கக்கூடாது என்று அந்த நாய் குட்டிகளும் நினைத்திருக்கும் போல, சுயமாக வாழ முடிவெடுத்து தாயை விட்டு கிளம்பியது. அந்த தாய் அந்த குட்டிகளை பிரிந்து தனியாக அமர்ந்து கொண்டு இருந்தது. அந்த குட்டிகள் எங்கெங்கோ சென்று கொண்டிருந்தன. இது அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த பொன்னுசாமிக்கு சுரீர் என்று உரைத்தது.

மனித இனத்தைத் தவிர மற்ற எல்லா மிருகங்களும் குட்டி பிறந்ததும் பால்குடி மறக்கும் வரக்கும் அம்மா கூட நடக்கிற வரைக்கும் திடமாகிற வரைக்கும் கூட இருக்கு.

ஆனா அதுக்கு அப்புறம், தாய் கூட இருக்குறது இல்ல. அதான் சுயம், அதான் சுயமரியாதை; அதுதான் அறிவு.

ஆனா இந்த மனுஷங்க இப்படி இல்லையே? தாத்தன் சம்பாதித்த சொத்து, அப்பா சம்பாதித்த சொத்து, குடும்ப சொத்து, அப்படி இப்படின்னு கேட்டு தொந்தரவு பண்ணிட்டு இருக்காங்க.

மிருகத்துக்கு இருக்கிற இந்த அறிவு கூட ,மனிதனுக்கு இல்லையே? என்று வருத்தப்பட்டார் பொன்னுசாமி

காலையில் சொத்து கிடைக்கும் என்ற ஆசையில் அசந்து தூங்கிக்கொண்டு இருந்தான் கணேஷ்.

நாயின் வாரிசுகளை பார்த்த பொன்னுசாமிக்கு புத்தியில் உரைத்தது – நாயின் அறிவு தன் மகனுக்கு வரவில்லையே என்பதுதான். அதையே நினைத்துக் கொண்டு இரவு படுக்கப் போனார்.

அவருக்குச் சொத்தை பற்றியோ அதைப் பிரித்துக் கொடுப்பது பற்றியோ எந்தக் கவலையும் இல்லை .

மனிதர்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள் என்ற ஒரு முடிவுக்கு வந்தவராய் இரவு தூங்கப் போனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *