செய்திகள்

வாக்குப்பதிவில் முந்திய முதல்வர் வேட்பாளர்கள் யார்? தேர்தல் ஆணையம் வெளியீடு

சென்னை, ஏப். 7–

5 முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் எத்தனை சதவீத வாக்கு பதிவாகி உள்ளது என்ற விவரம் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவின் முடிவில் 234 தொகுதிகளிலும் சேர்த்து 71.79% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், தமிழகத்தில் 72.78% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குறைந்த, கூடிய 5 தொகுதிகள்

அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33%, குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வில்லிவாக்கம் – 55.52%, தி.நகர் – 55.92%, வேளச்சேரி – 55.95%, மயிலாப்பூர் – 56.59% மற்றும் அண்ணாநகர்- 57.02% ஆகிய 5 தொகுதிகளில் தான் குறைவாக வாக்குப்பதிவு நடந்துள்ளது.

அதேபோல, பாலக்கோடு தொகுதியில்– 87.33%, குளித்தலை – 86.15%, எடப்பாடி – 85.60%, வீரபாண்டி – 85.53% மற்றும் ஒட்டன்சத்திரம் – 85.09% ஆகிய தொகுதிகளில் அதிகபட்ச வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5 முதல்வர் வேட்பாளர்களின் தொகுதி

முதல்வர் வேட்பாளர்களான பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 85.6%, மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 60.52%, கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் 60.72%, தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் 67.43%, சீமான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் 65% வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *