சிறுகதை

வழிநெடுகிலும் வாழ்க்கை பிறக்கும்… ராஜா செல்லமுத்து..

கொளுத்தும் கோடை வெயிலில் வெப்பம் அளவுக்கு மீறி விளைந்து, வெயில் விளைச்சலை வீதியெங்கும் வீசியிருந்தது. கண்படும் இடமெல்லாம் கானல் நீர் கதகதவென்று கொதித்துக்கிடந்தது.
மருந்துக்குக்கூட குருவிகளோ, பறவைகளோ எங்கும் இல்லை. ஈரம் தேடி அவைகளெல்லாம் எங்கோ விரைந்திருக்கக்கூடும். சாலைகளில் மனித நடமாட்டமும் வெகுவாகக் குறைந்திருந்தது. ஆங்காங்கே, தண்ணீர்ப்பந்தல் இருந்தாலும் அங்கெல்லாம் தண்ணீர் இல்லாமலே வெறும் குடம் மட்டுமே இருந்தன. இளநீர், நுங்கு வியாபாரமும் களைக்கட்டிக் கொண்டிருந்தது.
வெயிலின் தாக்கத்தை வெகுவாகக் குறைக்க வேண்டிய விமல் ஒரு நுங்குக்கடையில் நின்றான். குழந்தையை முந்தானையில் மறைத்துப் பாதுகாப்பதுபோல, இளநுங்குகளை பனம்பாளையில் போர்த்தி பாதுகாப்பாக வைத்திருந்தார் நுங்கு வியாபாரி.
” நுங்கு எவ்வளவு? விமல் கேட்டதும்
“பத்து நூறு ரூபா” என்றார் நுங்கு வியாபாரி.
என்னது பத்து நூறுரூபாயா?
“ஆமா” என்னங்க ரொம்ப விலையா இருக்கே? என்ற விமலை ஒரு மாதிரியாகப் பார்த்தார் நுங்கு வியாபாரி
கண்ணாடிக்கடையில ஏ/சி அறையில மறச்சு வைக்கிற விக்கிற பொருள ஒரு வார்த்த கூட பேசாம பல்போட்டுட்டு வாரீங்க. வேர்வ வழிய வழிய வீதியில கொண்டு வந்து விக்கிற எங்களையெல்லாம் பாத்தா உங்களுக்கு வேடிக்கையா தான் இருக்கும் என்று நுங்கு வியாபாரி பேசும் போதே அவர் உடம்பு முழுவதும் வேர்த்து ஊற்றியது.
எவ்வளவு வேணும்?
ஒரு இருபது நுங்கு தாரீங்களா?
“ம் … தாரேனே என்ற நுங்கு வியாபாரி கூடையை மூடியிருந்த ஒதுக்கி, கூடையினுள்ளே லாவகமாக கையை ஒதுக்கி, கூடையினுள்ளே லாவகமாக கையை விட்டு, பிள்ளையை எடுப்பது போல, நுங்குளை எடுத்து எடுத்து வைத்தார். அப்போது வேகமாக வந்த ஒரு பெண்.
யோவ் நீயெல்லாம் மனுசனா? இப்படி ஏமாத்திட்டயே பத்து நுங்கு நூறு ரூபாயா? அநியாயம் .அதிலயும் நுங்கு எதுவும் நல்லாவே இல்ல. எல்லாம் சப்புன்னு இருக்கு . ருசியே இல்ல .நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட.
த்தூ….. என்று கோபமாகப் பேசினாள் அந்தப் பெண்.
ஐயய்யோ நுங்கு நல்லா இல்லையோ? இந்த பொண்ணு இவ்வளவு தெளிவா கிழிச்சிட்டு இருக்காளே. ஒரு வேளை நாம வாங்குற நுங்கும் அப்படித்தான் இருக்குமோ? என்ற விமல் கொஞ்சம் விக்கத்தே நின்றான். அந்தப் பெண் கொஞ்சம் நாகரீகமாக இருந்தாலும் வாயிலிருந்து வந்து விழும் வார்த்தைகளெல்லாம் கொஞ்சம் உக்கிரமாகவே இருந்தன.
ம்ம் ….இந்த பொண்ணு சொல்றமாதிரி நுங்கு சரியா இல்லன்னா… வாங்கிட்டு போறது பூராம் வேஸ்ட்டா போயிருமே. தின்னு பாத்திட்டு, வாங்குனா என்ன? என்று யோசித்த விமல்
“ஐயா திங்க ஒரு நுங்கு தாரீங்களா?
“ஏன்?
ஒன்னசாப்பிட்டு பாத்தம்னா நல்லது அதான் என்று சந்தேகக் கண்ணோடு பேச,
ஐயா இந்த பொண்ணு மாதிரி உங்களுக்கும் சந்தேகம் வந்திருச்சா? அந்த பொண்ணு தான் , புரியாம பேசிட்டு ருக்குன்னா…. நீங்களுமா? இந்தாங்க சார், என்று ஒரு நுங்கை எடுத்துக் கொடுக்க அதை வாங்கிய விமல் ஒரு முறை நுங்கைப் பார்த்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தான்.
ம்…. இந்த பொண்ணு சொல்ற மாதிரி, அப்படி ஒண்ணும் நுங்கு தப்பா இல்லையே என்று சாப்பிட விமலைப் பார்த்த நுங்கு வியாபாரி என்ன சார் நுங்கு எப்படி இருக்கு?
நல்லாயிருக்கு என்பது போல் தலையாட்டினான் விமல்
இன்னும் நீ நுங்கு விக்கிறயா?
உன்ன என்ன பண்றேன்னு பாரு. நீ கெட்ட கேடுக்கு நுங்கு ஒரு கேடு என்று வாய்க்கு வந்தபடியே திட்டிக் கொண்டிருந்தவள் அந்த இடத்தை விட்டு மெல்ல நகர்ந்தாள். அந்தப் பெண் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த விமல்.
ஐயா உங்கள இவ்வளவு பேச்சு பேசிட்டு இருக்கா. எதுவும் பேசமா இருக்கிங்களே என்று விமல் சொல்ல அதற்கு சிரிப்பையே பதிலாகத் தந்தார் நுங்கு வியாபாரி.
விமல் கேட்ட நுங்கை பொதிந்து கொடுத்தார் நுங்கு வியாபாரி. அதை வாங்கிய விமல் அந்த இடத்தை விட்டு நகர்வதற்குள் மீண்டும் அந்த பெண் வந்தாள்.
ஐயய்யோ மறுபடியும் இந்த பொண்ணா? கிழிகிழின்னு கிழிக்கப் போறாளே என்று விமல் நினைத்துக் கொண்டிருக்க இந்தாம்மா ஒன்னோட செல்போன இங்களே விட்டுட்டு போயிட்ட என்று நுங்கு வியாபாரி செல்போனை எடுத்துக் கொடுக்க…..
எதுவும் பேசாமல் செல்போனை வாங்கிய பெண் எதுவும் பேசாமல் சென்றாள்.
ஏய் பாப்பா பொண்ணு…. யார எங்க திட்டுனாலும் எப்படி சண்ட போட்டாலும் நம்ம பொருள மட்டும் எங்கயும் தவறவிடக் கூடாது பாத்து செல்போன பத்திரமா வச்சுக்க என்று அந்தப் பெரியவர் பெரும் பெருந்தன்மையோடு பேசியது விமலுக்கு பெரிய வியப்பையே ஏற்படுத்தியது.
செல்போனை வாங்கியவள் எதுவும் பேசாமல் விறுவிறுவென விரைந்தாள்.
அந்தப் பெண் போவதைப் பார்த்த விமல்,
ஐயா இந்த பொண்ணு,
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்கள கிழி கிழின்னு கிழிச்சாளே அதுக்கு நீங்க பதில் ஏதும் பேசல .ஆனா அந்த பொண்ணு விட்டுட்டு போன செல்போன எதுவும் பேசாம பாதுகாப்பா குடுக்குறீங்களே. நீங்க பெரிய ஆளுங்க என்று விமல் சொல்ல,
தம்பி வியாபாரத்தில, அப்படி இப்படின்னு ஏதாவது வில்லங்கம் ;மேடு பள்ளம் ;நல்லவங்க கெட்டவங்க ;இப்படி நெறையா வரத்தான் செய்வாங்க ;அதையெல்லாம். கடந்து தாங்க போகணும். உங்களுக்கு நல்லா இருக்கிற நுங்கு அந்த பொண்ணுக்கு சரியா ல்ல .அப்படித்தான் தம்பி ப்படி வாரவங்க போறவங்க கூடயெல்லாம் சண்ட போட்டுட்டு இருந்தம்னா நாம ஏவாரம் செய்ய முடியாதுங்க. அதிலயும் இந்தப் பொண்ணு சின்னப் புள்ள ஏதோ தெரியாம பேசுது அந்தப் பொண்ணு இன்னும் நல்லா வாழணும்.
அதப் போயி பெருசு படுத்தகூடாது தம்பி என்று ஒரு ஞான குரு போல பேசினார் நுங்கு வியாபாரி.
படிக்காத ஒரு மனுசனுக்குள்ள இவ்வளவு அறிவா? இப்படி ஒரு பெருந்தன்மையா? என்று நுங்கு வியாபாரியை நினைத்த விமல் கொளுத்தும் வெயிலில் நுங்கை சுமந்து கொண்டு நடந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *