சிறுகதை

வரம் | ராஜா செல்லமுத்து

பக்தர்கள் குவிந்து கிடக்கும் பிரதானக் கோவிலில், ஒருபக்கம் மண்டப வேலை நடந்துகொண்டிருந்தது.

அதில் நிறையப் வேலை செய்து கொண்டு இருந்தார்கள்.பெரும்பாலானஆட்கள் இளைஞர்களாக இருந்தார்கள். கோயிலுக்கு வருவோரெல்லாம் தங்கள் குறைகளைச் சொல்லி வேண்டிக் கொண்டிருந்தார்கள்.

அதில் ஒருவர்தான் வீடு கட்டவேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றுகடவுளை வேண்டிக் கொண்டிருந்தார்.

கோயில் வளாகத்தில் பூக்கள் வியாபாரம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது

பூ விற்கும் இடத்தில் சில பெண்கள் பூக்களை கட்டிக் கொண்டிருந்தார்கள். வெளியே பிச்சைக்காரர்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள். கடவுளுக்கு தீபாராதனை நெய்வேத்தியம் இன்னும் என்னென்னவோ செய்து கொண்டு இருந்தார்கள்

கடவுள் அவர் இடத்தில் அமர்ந்துகொண்டு அருள்பாலித்துக் கொண்டிருந்தார்

ஒருவர் கடவுள் சன்னதியில் வந்து தான் செய்த காரியம் முடிந்துவிட்டதாகவும் அதற்கு கடவுள் தான் துணை நின்றார் என்றும் சொல்லி அங்கிருந்த உண்டியலில் பல லட்ச ரூபாய் பணத்தைப் போட்டுவிட்டு சென்றார்

இன்னுமொருவர் தன்னுடைய நேர்த்திக்கடன் நிறைவேறி விட்டதாகச் சொல்லி அவரும் தன்னாலான தொகையை உண்டியலில் போட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு பெண் கடவுளால் தான் தனக்கு குழந்தை பிறந்தது என்று சொல்லி கோயிலில் குழந்தையை போட்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

இப்படியாக அந்தக் கோயிலில் வேண்டிக் கொண்டதால் நிறைய நல்ல காரியங்கள் நடந்ததென்று அந்தக் கோயில் முழுவதும் நன்மையால் நிரம்பி வழிந்தது.

கோயிலைப் பற்றிய பெருமை கொள்ளும் பேச்சுக்களும் அந்த பகுதி முழுக்க பரவிக் கிடந்தது.

மண்டபத்தின் வேலைகள் வெகு வேகமாக நடந்து கொண்டிருந்தன. அதில் கல், மண், சிமெண்ட் என்று ஆட்கள் வியர்க்க வியர்க்க வேலை செய்து கொண்டிருந்தார்கள்

அப்போது கட்டிட வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் தன் வேலையை முடித்துவிட்டு, நேராக வந்து கோயிலில் பூஜை செய்தாள். கடவுளே நானும் காலையில் இருந்து பார்த்துகிட்டு தான் இருக்கேன். உனக்கு நேர்த்திக்கடன் செலுத்தின, எல்லாம் அவங்க சொன்னத கேட்டு நீ நிறைவேற்றியதாக சொல்றாங்க.

அப்படித்தான் காணிக்கையும் போட்டுட்டு போறாங்க அவங்களுக்கு நல்லது செய்ற நீ எனக்கு மட்டும் ஏன் நல்லது செய்ய மாட்டேங்குற? நானும் வருஷம் பூரா அதையே தான் உன் கிட்ட கேட்டு கேட்டு இருக்கிறேன்.

தலையில ஏத்தி வச்ச கல்ல இன்னம் இறக்கி வைக்க முடியல. நான் என்ன பாவம் பண்ணுனேன் எதுக்கு எனக்கு இவ்வளவு சோதனை கொடுக்கிற என்று கடவுளைப் பார்த்து வேண்டிக் கொண்டிருந்தார். அப்போது அவளைப் பார்த்த ஒரு பெண் கடகடவென சிரித்தாள்.

ஏன் இப்படி சிரிக்கிற? என்று அவள் கேட்க

நாம சொல்றது எல்லாம் கடவுள் காதுக்கு கேட்காது. வருஷம் பூரா நாமும் சொல்லிக் கொண்டுதான் இருக்குறம். எந்த கடவுளும் நமக்கு நல்லது செய்ற மாதிரி தெரியல. முதல்ல அஞ்சு செங்கல் சுமந்துகிட்டு இருந்த நான் , இப்ப என்னோட தலையில பத்து செங்கல் சுமக்கிறேன்.

இதுதான் நமக்கு கடவுள் விட்ட வழி என்று அந்த பெண் சொல்ல வேண்டியவளுக்கு வியர்த்துக் கொட்டியது.

கஷ்டத்தை கொடுக்கிற எங்களோட இந்த நிலைமை எனக்கு மாறணும். அவங்களுக்கு நல்லது செய்த, நீ எங்களுக்கும் நல்லது செய்யணும். எங்களுடைய நிலைமையை மாற்றனும்.

அப்படி நீ மாத்துனா பாதி சம்பளம் உனக்கு காணிக்கை கொடுக்கிறேன் என்று வேண்டிக் கொண்டாள். அப்போது கட்டிட வேலை செய்து கொண்டிருந்த இன்னும் சில பெண்மணிகள், செங்கல் மணல் சிமெண்ட் என்று வரிசையாக சுமந்துகொண்டு ஐந்தாவது மாடிக்கு ஏறிக் கொண்டிருந்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *