சிறுகதை

ரெண்டாந்தாரம் – மலர்மதி

ப்படி எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என தன் வருங்கால மனைவியைப் பற்றி ஷமீல் மனக்கோட்டைக் கட்டியிருந்தானோ அவ்வாறு அமையாமல் எல்லா அம்சங்களிலும் அதற்கு நேர்மாறாக வந்து வாய்த்தாள் வஹீதா.

அந்நிய ஆடவர் முன் முக்காடிட்டு முகத்தை மறைத்துக்கொள்ளுதல், ஐவேளை தொழுதல், திருமறை ஓதுதல் போன்ற மார்க்க ரீதியான கடமைகளை அவள் பின்பற்றுவ தில்லை என்கிற குறை அவளிடம் ஒருபுறமிருக்க சமைப்பது, வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, கணவனுக்குத் தேவையானவற்றைச் செய்வது, கணவன் சொல் கேட்பது, கணவனுக்கு அடங்கி நடப்பது, அவனை மதிப்பது போன்ற பொது வாழ்வின் அடிப்படைச் சேவைகளில் சிறிதும் அக்கறையே செலுத்துவதில்லை.

அது மட்டுமா? பணத்தைத் தண்ணீராய் வாரி இறைப்பாள். கேட்டால், “பணத்தை வைத்து என்ன பண்ணப்போறீங்க?” என்று கேட்பாள். வியர்வைச் சிந்தி உழைத்துச் சம்பாதித் தால்தானே அதன் அருமை புரியவரும்? உணவுப் பொருட்களை வீணாக்கி வீசி எறிவதிலும் வஹீதா சளைத்தவளில்லை.

என்ன பெண் இவள்? இப்படியும் ஒரு பெண் இந்த உலகத்தில் இருப்பாளா? இதோ… இருக்கிறாளே…

ஹோட்டல் சாப்பாட்டை வரவழைத்துச் சாப்பிடுவது, அதிக நேரம் தூங்குவது, டி.வி. பார்ப்பது என்பதே அவளுடைய அன்றாடப் பழக்கமாக இருந்தது.

ஒரே பெண் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டாள் போலும். நாளாக ஆக எல்லாம் சரியாகிவிடும் என ஷமீல் ஆரம்பத்தில் விட்டுக்கொடுத்தது எவ்வளவுப் பெரிய தவறு என்பதை பிற்பாடு அவனே உணர்ந்தான்.

நிமிர்த்தமுடியாத நாய் வால் அவள் என்று தெரிந்தது. அதை முழுமையாக உணர்வதற்க்குள் காலம் வேகமாக கடந்துவிட்டிருந்தது. அவன் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகிவிட்டிருந்தான். மனிதன் எதிர்பார்ப்பது எல்லாமே அவனுக்குக் கிடைத்துவிடுவதில்லை. இதுதான் நிதர்சன உண்மை. அடங்கிப் போனான் ஷமீல்.

ஆனால் அவனுடைய பரிதாபமான நிலையைக் கண்டு கொதித்தெழுந்தனர் அவன் உடன் பிறந்தோர்.

“ஏண்டாப்பா… உன் பொண்டாட்டி உன்னைக் கொஞ்சங்கூட மதிக்கிறதில்லை யாமே? நீ எப்படி எல்லாத்தையும் சகிச்சுக்கிற? நீ ஆம்பளை. உன் பொஞ்சாதியை கொஞ்சம் அடக்கி வை.” என அங்கலாய்த்தாள் ஷமீலின் அக்காள் சபீஹா.

மெளனம்தான் பதிலாகக் கிடைத்தது அவனிடமிருந்து.

ஷமீலுக்கு மூன்று அக்காமார்கள். ஒரு தம்பி. எல்லோருக்கும் திருமணமாகி பல்வேறு இடங்களில் செட்டில் ஆகியிருக்கிறார்கள். ஷமீலுக்கு அரசு உத்தியோகம். கை நிறைய சம்பளம். வசதிகள் இருந்தும் நிம்மதி இல்லை. உருப்படியான கணவன்மார்கள் கிடைக்காத எரிச்சலில் அவன் அக்காமார்கள், இவ்வளவு வசதியான வாழ்க்கைக் கிடைத்தும் கணவனுக்கு அடங்கி நடக்காத வஹீதாவை எண்ணி எண்ணி மேலும் ஆத்திரமடைந்த வண்ணமிருந்தனர். சகோதரிகள் ஒன்று கூடினால் அது பெரும்பாலும் ஷமீலைப் பற்றிய பேச்சாகத்தான் இருக்கும். சொந்த ரத்தம் என்பதால் கொதிக்கிறது.

திருமணமானதிலிருந்து கணவன் வீட்டில் வஹீதா இருந்தது சொற்ப காலமே. அடிக்கடி அவள் தாய் வீட்டிற்குப் போய்விடுவாள். பெருநாள் போன்ற சுப நாட்களையும் அவள் தன் தாய் வீட்டிலேயே கொண்டாடினாள். ஷமீலும் குழந்தைகளின் முகத்தைப் பார்த்து மாமியார் வீட்டில் தங்கியிருந்து பண்டிகையைக் கொண்டாடிவிட்டு வருவான்.

“இவனெல்லாம் ஒரு ஆம்பிளையா? ஒரு பொட்டைக் கழுதையை அடக்கத் தெரியலையே..?” எனக் கேட்டு காரி உமிழுவார்கள் ஷமீலின் அக்கா புருஷன்கள்.

பிறவியிலேயே சாந்த குணம் கொண்ட ஷமீலுக்கு அது உறைக்காதது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை.

மீலை அழைத்து வலுக்கட்டாயமாக உட்காரவைத்து விவரமாக பேசவேண்டும் என சகோதர சகோதரிகள் தீர்மானித்தார்கள். அவனுடைய பணம் வீணாகக் கரைவதையும், அவன் மனைவியால் அவனுக்கு ஒரு பைசா புண்ணியமும் கிடைக்காமல் இருப்பதையும் கண்ணுற்ற அவர்கள் ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.

திட்டமிட்டபடி எல்லோரும் அக்கா சபீஹா வீட்டில் ஒன்றுகூடினர்.

மதிய சாப்பாட்டுக்குப் பிறகு பேச்சு ஆரம்பமாயிற்று.

“இறைவன் உனக்கு இவ்வளவு வசதிகள் கொடுத்தும் நீ இப்படி இடிஞ்சுப்போய் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு வதைப்படறதைப் பார்த்தா எங்களால கொஞ்சங்கூட சகிச்சுக்கமுடியலை ஷமீல்…” என நேரிடையாக விஷயத்துக்கு வந்தாள் அக்கா சபீஹா.

ஷமீல் வழக்கம்போல் அமைதியாக அம்ர்ந்திருந்தான்.

“உனக்கு கல்யாணமாகி அஞ்சு வருஷமாகுது. இந்த அஞ்சு வருஷத்துல என்னைக்காவது ஒரு நாள் உன் பெண்டாட்டி உன்னோட முதுகைத் தேய்ச்சிவிட்டிருக் காளா, சொல்லு? என் வீட்டுக்காரரைக் கேளு. நான் முதுகு தேய்ச்சிவிடலைன்னா அவருக்குக் குளிச்சமாதிரியே இருக்காது.” என அங்கலாய்த்தாள் இரண்டாவது அக்கா மஸீஹா.

“தெனம் எண்ணெய்த் தடவி மசாஜ் பண்ணிவிடணும் என் வீட்டுக்காரருக்கு.” – இது சின்ன அக்கா ரஜியாவின் எரிச்சல்.

“அதெல்லாம் விடக்கா. எல்லோரும் ஒண்ணு போல இருப்பாங்களா? சின்ன, சின்ன விஷயத்தையெல்லாம் பெரிசு பண்ணிக்கிட்டிருந்தா எப்படி?” என வாயைத் திறந்தான் ஷமீல்.

“சரிப்பா. சின்ன விஷயங்களையெல்லாம் விட்டுத் தள்ளு. மூணு வேளை சமைச்சுப் போட்டு சரியான நேரத்துக்குச் சாப்பாடு கொடுக்கணுமா இல்லையா? அந்த வேலையாவது அவ ஒழுங்கா பண்றாளா? எப்பப் பாரு, எடுப்புச் சாப்பாடுதானே?

என்னைக்காவது ஒரு நாள் விருப்பப்பட்டா சமைக்கவேண்டியது. நீ வர்ற வரைக்கும் காத்திருக்காம முன்னாடியே சாப்பிட்டுவிடுவது, கொஞ்சமாவது அக்கறை இருக்கா உன் மேல அவளுக்கு? இப்படி வேளை கெட்ட வேளையில சாப்பிட்டு இப்ப பீ.பி., ஷுகர், தைராய்ட்னு மாத்திரைங்க முழுங்கிக்கிட்டிருக்கே. இப்படியே போனா உன்னோட நிலைமை என்ன ஆகறது? அதை நெனைச்சாத்தாம்பா எங்களுக்குக் கவலையா இருக்கு..” என்றாள் சபீஹா, உண்மையான அக்கரையோடு.

“நீங்கத்தானே எனக்காகப் பொண்ணு பார்த்து அவளைக் கட்டி வெச்சீங்க? நல்ல பொண்ணாப் பார்த்து கட்டிவெச்சிருந்திருக்கலாமே? இப்ப ஏன் ஆளாளுக்குப் பேசறீங்க?” என்று கேட்டான் ஷமீல்.

“ஆமாம்பா. நாங்கத்தான் கட்டிவெச்சோம். ஒத்துக்கறோம். அவ இப்படி இருப்பாள்னு தெரியாதே. தெரிஞ்சிருந்தா நாம ஏன் இந்த மாதிரி பொண்ணை உன் தலையில் கட்டிவெக்கிறோம்?”

“இப்ப என்னை என்ன பண்ணச்சொல்றீங்க?”

“பேசாம அவளை ‘தலாக்’ விட்ரு. நாங்கத்தானே உன்னைக் குழியில தள்ளி, உன் வாழ்க்கையைச் சீரழிச்சதா நீ நினைச்சுக்கிட்டிருக்கே? நாங்களே இப்ப வேறு ஒரு நல்ல பொண்ணாப் பார்த்து கட்டி வெக்கிறோம். நீ சந்தோஷமா இருப்பே.”

சகோதரிகளின் திட்டத்தைக் கேட்டுத் திடுக்கிட்டான் ஷமீல்.

“நீ.. நீங்க என்ன சொல்றீங்க? ரெண்டு குழந்தைங்களை வெச்சுக்கிட்டு வஹீதாவை விவாகரத்து பண்றதா?”

“ஏன்? அப்படி என்ன உனக்கு வயசாயிடுச்சி? எத்தனையோ பேரு ரெண்டாங் கல்யாணம் பன்ணிக்கலையா? நம்ம மார்க்கத்துல நாலு நிக்காஹ் வரை பண்ணிக்கலாம்னு இருக்கு. நீ ஏன் பயப்படறே?”

“நானும் ஆண்டாண்டு காலமா இதைக் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். நம்ம மார்க்கத்துல நாலு கல்யாணம் வரை பண்ணிக்கலாமுன்னு. இப்படி சொல்றதே ஒரு வழக்கமா ஆயிடுச்சு உங்களுக்கெல்லாம். அப்படி பல திருமணங்கள் புரிவது ஒண்ணும் அவ்வளவு சுலபமில்ல. அதுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் இருக்கு. அதைப் பத்தி யாரும் நினைச்சுக்கூடப் பார்ப்பதில்லை. அப்படியே நம்ம மார்க்கத்துல இதுக்கு இடம் உண்டுன்னு எடுத்துக்கிட்டாலும் நம்ம வம்சத்துல யாராவது இதுவரை ரெண்டாவது கல்யாணம் பண்ணி இருக்காங்களா? இருக்கமாட்டார்கள். ஏன்? நாங்க மதத்தால் முஸ்லீம்களாக இருக்கலாம். ஆனால், பிறப்பால், உணர்வால் பச்சைத் தமிழர்கள். தமிழ் பண்பாடு, கலாச்சாரம் இவற்றில் ஊறிப்போனவர்கள். ஒருவனுக்கு ஒருத்திங்கற கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள். அப்படியே யாராவது இரண்டாவதாக மணம் செய்திருந்தால் அதுக்கு வலுவான காரணம் இருக்கும். யாரும் அப்படி ஒரு முடிவுக்கு அவ்வளவு சுலபமாக வந்துவிடுவதில்லை. பேச்சுக்கு வேணும்னா சொல்லலாமே தவிர, பிராக்டிக்கலா பார்க்கறப்போ இது அவ்வளவு ஈஸி இல்லை.”

“நீ என்ன சொல்ல வர்றே ஷமீல்?”

“இப்பெல்லாம் சின்ன, சின்ன விஷயத்துக்கெல்லாம் ‘தலாக்’ விடுவது அல்லது ‘குலா’ எனப்படும் விவாகரத்து வாங்குவது சர்வசாதாரணமாயிருச்சு. இதற்கெல்லாம் ஈகோ தான் காரணம்.

ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுப்பதே இல்லை. நானா, நீயா? என்கிற போட்டி மனப்பான்மைதான் இன்றைக்குக் கணவன்-மனைவியிடையே தலை விரித்தாடு கிறது. ஒருவித தாழ்வு மனப்பான்மையும் சிலருடைய பிரிவுக்கு அடித்தளம் அமைக்கிறது. எந்த ஒரு பிரச்சனையும் ஆகட்டும், கணவன்-மனைவி இருவரும் அமர்ந்து மனம் விட்டுப் பேசினால் அந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கலாம். அதை விட்டு விட்டு ஏதோ மார்க்கெட்டில் வாங்கிய பொருள் சரியில்லைன்னு தூக்கிப் போடுவது போல் மனைவியைத் தூக்கி எறிந்துவிட்டு வேறு ஒருத்தியைக் கட்டிக்கொள்வது எந்த விதத்தில் நியாயம்னு சொல்லுங்க?”

ஷமீல் சொன்ன விஷயங்களில் ஒளிந்திருந்த அப்பட்டமான உண்மைகளை உணர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக தெளிய ஆரம்பித்தனர் அவன் சகோதரிகள்.

“கடைசியா நீ என்னத்தான் சொல்றே, ஷமீல்?” என்று கேட்டாள் சபீஹா.

“சரி, நீங்க எல்லோரும் இவ்வளவு தூரத்துக்கு என்னை வற்புறுத்திறீங்களே, உங்களுக்கு ஒரு கேள்வி நான் கேக்கறேன். உண்மையா, நேர்மையா அதுக்குப் பதில் சொல்லணும்.”

“அப்படி என்ன கேள்வி அது? கேளு, பதில் சொல்றதுல எங்களுக்கு என்ன சிரமம்?”

“ஏதோ ஒரு காரணத்துக்குக்காக மாமா ரெண்டாவது நிக்காஹ் பண்ண முடிவு எடுக்கறார்னு வெச்சுக்கலாம். உனக்கு எப்படிக்கா இருக்கும்? சந்தோஷமா நீ உன் கணவரை விட்டுக்கொடுப்பியா?”

கேட்டமாத்திரத்தில் தூக்கி வாரிப்போட்டது சபீஹாவுக்கு. மற்ற அக்கா மார்களும் ஆடிப்போனார்கள்.

“நம்ம மார்க்கத்துலதான் அதுக்கு இடம் இருக்கே, பரவாயில்லைன்னு நீங்க சந்தோஷமா அதை ஏத்துப்பீங்களா? சொல்லுங்க?”

ஷமீலின் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் வாயடைத்துப்போய் அமர்ந்திருந்தனர்.

“என் பெண்டாட்டிக்கு நான் அடிக்கடி புத்திமதி வழங்கிட்டுத்தான் இருக்கேன். அதைக் கேட்டு, கேட்டு ஒரு நாள் அவள் திருந்துவாள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது, இல்லேன்னா, அவளாகவே திருந்தட்டும். எல்லாம் வல்ல இறைவன் அவளுக்கு நல்லறிவு வழங்குவான்னு நான் எதிர்பார்க்கிறேன். அந்த எதிர்பார்ப்பில்தான் நான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன். தயவு செஞ்சு இனிமேல் யாரும் என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க.”

இறுதியாகச் சொல்லிவிட்டு உறுதியாக எழுந்து நின்றான் ஷமீல்.

வஹீதா அவனருகில் வந்து என்னை மன்னிச்சிடுங்க . இனி உங்க உயர்ந்த குணத்தை மதிச்சு நடக்கிறேன் என்றாள்.

அனைவரும் வாயடைத்துப்போனார்கள்.

வஹீதாவை அரவணைக்க ஷமீல் கைகள் பரபரத்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *