செய்திகள்

ரஷ்ய ராணுவத்தின் தொடர் தாக்குதல் : 32 லட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வௌியேற்றம்

கீவ், மார்ச் 19–

32 லட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். உள்நாட்டில் 65 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் இடம் பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், லிவிவ் நகரில் பல ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். இதில், ராணுவ விமானங்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யும் இடம் மற்றும் பஸ் ரிப்பேர் செய்யும் இடம் ஆகியவை சேதமடைந்துள்ளது. 6 ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில், அதில் 2 ஏவுகணைகளை அழித்துவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது..

கீவ் அருகே உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தனது கட்டுப்பாட்டில் மீண்டும் உக்ரைன் கொண்டுவந்துள்ளது. தலைநகர் கீவ் நகரில் இருந்து 70 கிமீ தொலைவுக்கு ரஷ்ய ராணுவத்தை பின்னுக்குத் தள்ளியிருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

செர்னிஹிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குழந்தைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தொட்டில் வண்டிகள் உக்ரைனின் லிவில் நகர கவுன்சில் அலுவலகத்திற்கு வெளியே பொதுஇடத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

109 குழந்தைகள் பலி

ரஷ்ய தாக்குதலில் இதுவரை 109 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளை கொண்டு செல்லும் 109 தொட்டில் வண்டிகள் காலியாக நிறுத்தப்பட்டன.

உக்ரைனில் இருந்து நேற்று ஒரேநாளில் 9 ஆயிரத்து 145 பேர் வெளியேறியுள்ளனர். ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள மரியபோல் நகரில் இருந்து மட்டும் நேற்று 4 ஆயிரத்து 972 பேர் வெளியேறி உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்வு அமைப்பின் கூற்றுப்படி 32 லட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். உள்நாட்டில் 65 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. பிடனுக்கு நன்றி

உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவிகளை வழங்கிய அமெரிக்க அதிபர் பிடனுக்கு நன்றி தெரிவிப்பதாக, அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ஆனால், என்ன உதவிகள் செய்யப்பட்டது என்பதை தெரிவிக்க மறுத்துவிட்ட அவர், அது எங்களின் பாதுகாப்பு. ரஷ்யாவிற்கு கூடுதல் தகவல்களை தெரிவிக்க விரும்பவில்லை. போரை சந்திக்க எப்படி தயாராகி உள்ளோம், எங்களிடம் உள்ள தற்காப்பு நடைமுறைகளை பற்றி ரஷ்யாவிற்கு தெரியாது எனவும் கூறினார்.

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த ரஷ்யாவுக்கு சீனா அழுத்தம் கொடுக்க வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சீனா உதவி செய்தால் இது உலக நாடுகளுடனான உறவை மேம்படுத்த உதவும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.