செய்திகள்

யானைக்கவுனி மேம்பாலத்தில் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆய்வு

சென்னை, ஆக.14–

சென்னை யானைக்கவுனி சாலையில் 50 மீட்டர் நீளமுள்ள ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இம்மேம்பாலம் ரெயில்வே துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேம்பாலத்திற்கான சாய்வுதளம் சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பாலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ரெயில்வே துறை அலுவலர்களுடன் கமிஷனர் பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார்.

தற்பொழுது நடைபெற்று வரும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்வடங்கள் மற்றும் மின்கோபுரங்கள் மாற்றி அமைக்கும் பணிகள் முடிவுற்றவுடன் பழைய பாலத்தை இடிக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், 50 மீட்டர் நீளமுள்ள பழைய பாலம் இடிக்கப்பட்டு, 150 மீட்டர் நீளம் கொண்ட புதிய பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ரெயில்வே துறையினரால் தெரிவிக்கப்பட்டது.

ரெயில்வே துறையினரால் புதிய பாலம் கட்டும் பணி துவங்கப்படும்பொழுது, சென்னை மாநகராட்சியின் மூலம் ரூ.26.45 கோடி மதிப்பீட்டில் பாலத்தின் மேற்கு புறம் 250 மீட்டர் மற்றும் கிழக்கு புறம் 180 மீட்டர் நீளம் கொண்ட சாய்வுதளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின்போது, துணை ஆணையாளர் (பணிகள்) எம்.கோவிந்த ராவ், தலைமைப் பொறியாளர் (பாலங்கள்) எஸ்.ராஜேந்திரன், மேற்பார்வை பொறியாளர் (பாலங்கள்) எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரெயில்வே துறையின் உதவி கோட்டப் பொறியாளர் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி கோட்டப் பொறியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *