செய்திகள்

முதன் முறையாக தனியார் ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணித்த 4 பணக்காரர்கள்

வாஷிங்டன், ஏப்.9–

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரூ.1500 கோடி செலவு செய்து உலகின் பெரும் பணக்காரர்கள் சிலர் சென்றுள்ளனர். முதன்முறையாக முற்றிலுமாக தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ராக்கெட்டின் மூலம் இவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, இன்று காலை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து 4 பேருடன் இந்த ராக்கெட் சீறிப்பாய்ந்தது.

நாசாவுடன் இணைந்து ஆக்சியம், ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய தனியார் விண்வெளி நிறுவனங்கள் இந்த விண்வெளிச் சுற்றுலாவை சாத்தியப்படுத்தியுள்ளது. இதற்காக, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டானது அதனுள் அமைந்துள்ள ட்ரேகன் கேப்சூலில் 4 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு இந்திய நேரப்படி 7.45 மணிக்குப் புறப்பட்டது. இந்த மிஷனுக்கு நாசா விண்வெளியின் முன்னாள் வீரர் மைக்கேல் லோபஸ் அல்ஜீரியா தலைமை வகிக்கிறார். இவர் அமெரிக்கா, ஸ்பெயின் என இருநாட்டுக் குடியுரிமை பெற்றவர். இதற்கு முன்னர் இவர் 4 முறை விண்வெளிக்குப் பயணம் செய்துள்ளார். கடைசியாக 2007ல் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் சென்று வந்தார்.

இப்போது அவருடன் அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் லாரி கொனார், கனடா நாட்டின் முதலீட்டாளர் மார்க் பாத்தி, மற்றும் இஸ்ரேலின் முன்னாள் போர்விமான விமானி எய்டன் ஸ்டிபே ஆகியோரும் சென்றுள்ளனர். இவர்கள் 8 நாட்கள் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தங்குகின்றனர். இதற்கான மொத்த செலவு 55 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1500 கோடி எனக் கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் தலா ரூ.480 கோடி கொடுத்து இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தினை இதற்கு முன்னரும் தனிநபர்கள் சுற்றிப்பார்க்கச் சென்றுள்ளனர் என்றாலும், இந்தப் பயணத்தின் சிறப்பு, இது முதன்முறையாக தனியார் ராக்கெட்டைக் கொண்டு நடத்தப்பட்டுள்ளது தான்.

Leave a Reply

Your email address will not be published.