செய்திகள்

மீன்பிடி மசோதாவால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : எல்.முருகன் தகவல்

சென்னை, செப்.18-

மீன்பிடி மசோதாவால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

மேலும் அவர் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி சிறப்பு பொருளாதார பூங்கா அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மத்திய தகவல் – ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு – பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவ மக்களுடன் நேற்று கலந்துரையாடினாா்.

அப்போது, மீனவ பிரதிநிதிகள் மத்திய அமைச்சர் எல்.முருகனிடம், தங்களுக்கு மானிய விலையில் அளிக்கப்படும் டீசல் அளவை 3 ஆயிரம் லிட்டராக உயர்த்தி தர வேண்டும். ஏற்றுமதி கூடங்கள் அமைத்து தரவேண்டும். தற்போதைய மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைத்து, கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் ஒரே காலத்தில் அதாவது புயல்கள் உற்பத்தியாகும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தில் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்க வேண்டும். மீன்பிடி உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கருவாடு காய வைக்க பிரத்தியேகமாக இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:-

இந்தியாவில், சென்னை, விசாகப்பட்டினம், கொச்சி உள்பட 5 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்தப்படும் என்று மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் சர்வதேச தரத்திற்கு இணையான நவீன மீன்பிடி துறைமுகமாக மாற்றப்பட உள்ளது. அதில், நீங்கள் (மீனவ பிரதிநிதி கள்) கேட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்.

திருவொற்றியூர் மீன்பிடி துறைமுகத்திற்கான பணி 70 சதவீதம் முடிவடைந்து உள்ளது. இதுபோக, இன்னும் 6 மீன்பிடி துறைமுகங்கள் அமைப்பதற்கான பணிகள் தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

மீனவர்கள் பயப்பட தேவையில்லை

மத்திய அரசின் மீன்வள பாதுகாப்பு சட்டம் மீனவர்களை பாதுகாக்கவே கொண்டு வரப்படுகிறது. இதனால் பாரம்பரிய மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. வெளிநாட்டு கப்பல்களை கட்டுபடுத்துவதற்காகவே இந்த சட்டம்.

தமிழக மீன்பிடி சட்டத்தின்படி, 12 நாட்டிக்கல் மைல்களுக்குள் மீன்பிடிக்கும் மீனவர்கள் தான் பதிவு செய்யப்படுகிறார்கள். எனவே ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே மீன்பிடி மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.

மேலும் இந்த மசோதா முழுக்க முழுக்க கலந்தாய்வில் பரிசீலனையில் தான் இருக்கிறது. இது குறித்து நாடு முழுவதும் மீனவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன. மீனவர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த சட்ட மசோதா குறித்து மீனவர்கள் பயப்பட தேவையில்லை.

மீனவ பெண்கள் பயன்பெறும் வகையில்…

மீனவ பெண்கள் பயன்பெறும் வகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி சிறப்பு பொருளாதார பூங்கா கொண்டுவரப்பட உள்ளது. சுமார் ரூ.296 கோடியில் அமைய உள்ள கடல்பாசி சிறப்பு பொருளாதார பூங்காவிற்காக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் அதற்கான இடம் தேர்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கலந்துரையாடலில் மீனவர் விசைப்படகு கூட்டமைப்பை சேர்ந்த குப்பன், கபிலன், தேசிங்கு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அமைச்சர் முருகன் அவற்றிற்கு பொறுமையாக விளக்கமளித்தார்.

இதன் பின்னர், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தும் திட்டம் குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக, சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியில் மத்திய அரசின் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு கட்டுமான மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.200 கோடியில் கட்டப்பட்டு வரும் சூரை மீன்பிடி துறைமுகத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்தார்.’

இந்த ஆய்வுகளின் போது, சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ரவீந்திரன், தமிழக மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை கூடுதல் செயலாளர் ஜவகர், மீன்வளத்துறை இயக் குனர் பழனிசாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *