போஸ்டர் செய்தி

மின்னொளியில் ஜொலித்த ‘ஈபிள் டவர்’

பாரீஸ்,மே.17–
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் டவர் திறக்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து டவரில் 12 நிமிட வண்ணமயமான லேசர் விளக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரான்சின் அடையாளங்களில் ஒன்று ஈபிள் டவர். பிரான்ஸ் புரட்சியை நினைவுப்படுத்தும் விதமாக 1889ல் கஸ்டேவ் ஈபிள் என்பவரால் கட்டப்பட்டது. 324 மீ. உயரம் கொண்ட இந்த டவரை கட்டி முடிக்க 2 ஆண்டுகள் இரு மாதங்கள் ஐந்து நாட்கள் ஆகின. இதன் மொத்த எடை 10 ஆயிரம் டன். இதன் உச்சத்தில் உள்ள ஆண்டெனாவின் நீளம் மட்டும் 24 மீட்டர்.
கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் ஈபிள் டவர் 6 இன்ச் வளர்கிறது என்றும் குளிர்காலங்களில் அதே அளவு சுருங்குவதாகவும் கூறுகின்றனர். காற்று பலமாக வீசும் போது டவரின் உச்சிப் பகுதி 6லிருந்து 7 மீட்டர் வரை முன்னும் பின்னும் அசையும். உலக அதிசயமாக திகழும் இக்கோபுரத்தை இடிக்குமாறு இரண்டாம் உலகப் போரின் போது பிரான்ஸ் ஆளுனருக்கு ஜெர்மனி அதிபர் ஹிட்லர் உத்தரவிட்டார். அவர் மறுத்து விட்டார். இக்கோபுரம் கட்டப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்ததை அரசு நேற்று கொண்டாடியது. ஈபிள் டவரில் வண்ணமயமான லேசர் விளக்கு நிகழ்ச்சியை பலர் ஆர்வமாக கண்டு ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *