செய்திகள்

மாற்றுத்திறனாளியை பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்ட நடத்துனர் சஸ்பெண்ட்

திருப்பூர், நவ. 4–

திருப்பூரில் மாற்றுத்திறனாளியை பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்ட நடத்துனரை போக்குவரத்து துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ். பாணிபூரி கடை நடத்தி வரும் இவர், 80 சதவீத பார்வை குறைபாடு உடையவர். இவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவரை வழிநடத்த உடன் ஒருவர் செல்லவும் அந்த அனுமதி அட்டையில் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சத்யராஜ், தனது மனைவி மற்றும் 17 வயது மகனுடன் வீரபாண்டியில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்ல நேற்று மாநகர பேருந்தில் ஏறி உள்ளார். மாநகரப் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதாலும், தனக்கும் தனது மகனுக்கும் இலவச பேருந்து பயண அட்டை உள்ளதாலும், தான் பயணக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என நடத்துநரிடம் தெரிவித்துள்ளார்.

நடத்துனர் பணி இடைநீக்கம்

ஆனால் நடத்துநர் முத்துக்குமார், உங்கள் மனைவிக்கு தான் பாஸ் உள்ளது. மகனுக்கு பயண சீட்டு பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் சத்யராஜ் தனக்கு உள்ள சலுகையை நீங்கள் எப்படி தடுக்க முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடத்துநர், 3 பேரையும் கீழே இறங்க சொல்லி உள்ளார். இதனை சத்யராஜின் மகன் சிபிராஜ் வீடியோ எடுத்துள்ளார். இதனால் கூடுதலாக ஆத்திரமடைந்த நடந்துநர் முத்துக்குமார் சிபிராஜை கன்னத்தில் அறைந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட சத்யராஜ், திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் துறை ரீதியாகவும் விசாரனை நடத்த கோரிக்கை வைத்தார். இதனையடுத்து மாற்றுத்திறனாளியை பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்ட நடத்துனர் முத்துக்குமாரை, பணியிடை செய்து மாவட்ட போக்குவரத்து பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *