செய்திகள்

மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

சென்னை, வடகடலோர மாவட்டங்களில் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது

சென்னை, டிச.10–

மாண்ட்ஸ் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.

சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சென்னையில் 300 மரங்கள் விழுந்துள்ளது. சாலைகளில் மரக்கிளைகள், இலைகள் ஆகியவை குவிந்து குப்பை கூளங்கள் போல காட்சி அளித்தன. இதனை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து நேற்றிரவு 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது.

சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்தது. மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

புயல் கரையைக் கடந்த போது சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. தொடர்ந்து இன்று பிற்பகலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். அது வட உள் மாவட்டங்கள் வழியாக கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. நள்ளிரவு 12 மணிக்கு பிறகு காற்றின் வேகம் மிகவும் அதிகமாக இருந்தது.

விழுந்த 300 மரங்களை

அகற்றும் பணி

சென்னை மாநகர் முழுவதும் 300 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. தெற்கு கிழக்கு மண்டலத்தில் 80 மரங்களும், வடக்கு மேற்கு மண்டலத்தில் 25 மரங்களும் சாலையில் விழுந்துள்ளன. விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்களும், போலீசாரும் ஒருங்கிணைந்து அகற்றினார்கள். இதற்காக ஜேசிபி, டிப்பர் லாரி என 200 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 94 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

இதனை அகற்றும் பணியில் 30 ஆயிரம் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

10-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் அறுந்து விழுந்த மின் வயரை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் துரிதமாக ஈடுபட்டனர்.

புயலின் தாக்கம் நள்ளிரவுக்கு மேல் தீவிரமானதை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பின்னர் காலையில் மின்சாரம் வழங்கப்பட்டது.

மரம் சாய்ந்து விழுந்து சாலைகளில் மரக்கிளைகள், இலைகள் ஆகியவை குவிந்து குப்பை கூளங்கள் போல காட்சி அளித்தன. அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் இன்று காலை முதலே ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகர் முழுவதுமே பெரிய விளம்பர போர்டுகள் முதல் சிறிய போர்டுகள் வரை அனைத்தும் பலத்த காற்றால் பறந்தும் கிழிந்தும் காணப்பட்டன.

கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தது. கடந்த 121 ஆண்டுகளில் சென்னைக்கும்–புதுச்சேரிக்கும் இடையே 12 புயல்கள் இதுவரை கடந்து இருக்கின்றன.

தற்போது இந்த ‘மாண்டஸ்’ புயலும், சென்னைக்கும்–புதுச்சேரிக்கும் இடையிலான பகுதிகளில் கடந்திருப்பதால், 13–வது புயலாக இது பார்க்கப்படுகிறது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *