செய்திகள்

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி.க்கு இடஒதுக்கீடு தீர்ப்பு: எடப்பாடி, ஓ.பி.எஸ். வரவேற்பு

அண்ணா தி.மு.க.வின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி.க்கு இடஒதுக்கீடு தீர்ப்பு:

எடப்பாடி, ஓ.பி.எஸ். வரவேற்பு

அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்வில் முன்னேற்றம் காண அயராது உழைப்போம்

சென்னை, ஜூலை 28–

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி.க்கு இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய தொகுப்பிற்கு அளிக்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா தி.மு.க. தொடுத்த வழக்கில், இடஒதுக்கீடு வழங்கப்பட எந்த ஒரு சட்ட ரீதியிலான தடையும் இல்லை; இடஒதுக்கீடு அளிக்கப்பட 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுத்து, அடுத்த கல்வியாண்டிலிருந்து இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை அண்ணா தி.மு.க. நன்றியுடன் வரவேற்கிறது.

அயராது உழைப்போம்

சமூகநீதி காத்த வீராங்கனை அம்மாவின் வழியில் அண்ணா தி.மு.க. பணியாற்றுவதை உலகிற்கு பறைசாற்றும் வகையில் இத்தீர்ப்பு அமைந்திருப்பதை பெருமையுடன் வரவேற்கிறோம்.

மத்திய சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ் நாடு அரசு சுகாதாரத் துறை மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் அடங்கிய குழுவை அமைத்து, இடஒதுக்கீடு குறித்த முடிவை மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் காலக்கெடு விதித்திருப்பது இத்தீர்ப்பின் பலன்கள் விரைவில் நடைமுறைக்கு வர வகை செய்கிறது.

தமிழ் நாட்டில் சமூக நீதியை நிலைநாட்டி, அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்வில் முன்னேற்றம் கண்டிட அயராது உழைப்போம் என்ற அண்ணா தி.மு.க.வின்கொள்கைக்கு கிடைத்த பரிசாக இத்தீர்ப்பினைப் போற்றி வரவேற்கிறோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *