வாழ்வியல்

மரபணுவை வெட்டி ஒட்டும் அதி நவீன தொழில்நுட்பம்–2

கருவுற்ற குரங்கு முட்டைகளில் இரண்டு மரபணுக்களை, மரபணு எடிட்டிங் முறையில் (genome editing ) மாற்றி வைத்தார்கள். பின்னர் இவற்றை வாடகைத் தாய்மார்களின் கருப்பையில் வைத்தார்கள். இதன் பயனாக இருண்டு வால் நீண்ட குரங்குக் குட்டிகள் பிறந்துள்ளன. ஆனால், சில வாடகைத் தாய்மாரின் கருப்பையில் வைத்தவை சிதைந்துவிட்டன.

இந்த மரபணு எடிட்டிங் செயன்முறையை “Crispr/Cas9” என்கிறார்கள். நான்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தில் (Nanjing Medical University) செய்யப்பட்ட இந்த ஆய்வு பற்றிய தகவலானது ‘செல்’ என்ற அறிவியல் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

பயன்பாடுகள்

இந்த ஆய்வானது மரபணு விஞ்ஞானிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. முக்கிய காரணம் என்னவென்றால் இந்த முறையின் போது ஒரு மிருகத்தில் உள்ள தவறான அல்லது நோயை உண்டாக்கக் கூடிய மரபணுவை, கலங்களிலிருந்து துல்லியமாக அகற்றி அதற்கும் பதிலாக நல்ல மரபணுவை மாற்ற முடிகிறது.

இரண்டாவது காரணம் இது வரை நோய்கள் பற்றிய ஆய்வுகளுக்கு சுண்டெலிகளையே பயன்படுத்தினர். ஆனால் சுண்டெலிகளின் மூளையானது மனித மூளையிலிருந்து மிகவும் வேறுபட்டது என்பதால், மூளை பற்றிய ஆய்வுகளுக்கு பொருத்தமானது அல்ல. ஆனால் குரங்கு மூளை பெருமளவு பொருந்தி வரக் கூடியதாகும் என்பதாலாகும்.

உதாரணமாக ஸ்டெம் சிகிச்சை முறையின் போது, கலங்களை மூளைக்குள் ஒட்ட வைத்து அவை எவ்வாறு செயற்படுகின்றன என்பதை அறிய, சுண்டெலிகளை விட குரங்கு மூளைகள் பொருத்தமாக இருக்கும். இந்த கிரிஸ்பர் ‘Crispr’ முறையானது, மற்றெந்த மரபணு சிகிச்சை முறைகளையும் விட, நுணுக்கமான மரபணு மாற்றங்களைச் செய்ய உதவுகிறது என நம்புகிறார்கள்.

எதிர்க் குரல்கள்

விஞ்ஞான ரீதியான ஆதரவு மிகுந்துள்ள போதும், சமூக ரீதியாக பலர் எதிர்க் குரல் எழுப்புகிறார்கள். அறிவு மிக்கதும், உணர்ச்சிகள் நிறைந்ததுமான மிருகங்களை இவ்வாறு ஆய்வுகளுக்குப் பயன்படுத்தி நோயுள்ள மிருகங்களை உருவாக்குவது தார்மீக ரீதியாகத் தவறானாது என அவர்கள் வாதிடுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *