செய்திகள்

மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Spread the love

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள

மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

 

சென்னை, மே.23-

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக நீங்கள் பொறுப்பேற்பதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடின உழைப்பு, திறமை மூலம் இவ்வளவு பெரிய உயர்ந்த பதவியை நம் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அடைந்திருப்பது, இந்தியாவுக்கு கிடைத்த பெருமையாகும்.

நீண்டகாலம் நீங்கள் ஆற்றிய தொழிலுக்கு தற்போது மிகச்சரியான அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் சார்பில் உங்களை பாராட்டுவதோடு, உங்கள் பணி வெற்றிகரமாக அமையட்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பொறுப்பேற்பு

உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைவராக இருந்த ஜப்பானைச் சேர்ந்த ஹிரோகி நகாடானி பதவி காலம் முடிவடைந்தது. புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் 194 நாடுகள் ஆதரவுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து காணொலி காட்சி மூலம் அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘‘கொரோனா வைரஸ் தொற்று உலக அளவிலான பிரச்சினையாக இருக்கும் நேரத்தில் நான் இந்தப் பொறுப்பை ஏற்கிறேன். அடுத்த 20 ஆண்டுகளுக்கு பல்வேறு சுகாதாரச் சவால்கள் இருக்கும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொண்டுள்ளோம். இந்த சுகாதார சவால்களை எதிர்கொள்ள அனைவரும் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது’’ என்றார்.

நிர்வாகக் குழு ஆண்டுக்கு 2 முறை கூடி, உலக சுகாதாரம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் செயல் திட்டங்களுக்கு இந்த குழு பரிந்துரை வழங்கும். அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் ஹர்ஷ்வர்தன் நீடிப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *