சிறுகதை

மக்கள் சேவை | கரூர் அ.செல்வராஜ்

ஏழை எளிய நடுத்தரக் குடும்பத்து மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் நிறைவான சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை அது.

மருத்துவரைப் பார்க்கும் முன் அனுமதி பெற்றிருந்த பழைய மற்றும் புதிய நோயாளிகளின் பெயர்களை அழைத்து அவர்களுக்கு டோக்கன் வழங்கி நாற்காலியில் அமரச் செய்தாள் ராதா.

சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நாற்காலியில் அமர்ந்திருந்தான் ராஜ்மோகன். தனக்கு அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயது மனிதரிடம் மெல்லிய குரலில் பேசினான். அவரைக் கிளினிக் வெளியே அழைத்து வந்தான்.

மீண்டும் பேசத் தொடங்கினான்.

‘‘அண்ணே! உங்க பேரு… சரவணன் தானே’’ என்று கேட்டான்.

தன் பெயரை சரியாகச் சொல்லிய தம்பியைப் பார்த்து தனக்கிருந்த ஞாபக சக்தியுடன் கூர்ந்து பார்த்து ‘‘தம்பி உங்க பேரு ராஜ்மோகன் ‘‘என்றார்.

சரவணன், ‘‘அண்ணே! நீங்க என்னை மறக்காம நல்லா ஞாபகத்திலே வச்சிருக்கீங்க’’ என்றான்.

தன் உயிரைக் காப்பாற்றிய ராஜ்மோகனை மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காகக் கடவுளுக்கு மனதிற்குள் ஒரு நன்றியை சொல்லி விட்டு ராஜ்மோகனிடம் பேச்சைத் தொடர்ந்தார் சரவணன்.

‘‘தம்பி ராஜ்மோகன்! நான் ஒரு பெயிண்டர். வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கிறது தான் என்வேலை. ஆறு மாதத்துக்கு முன்னாலே உங்க வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வந்திருந்தேன். மேல் மாடிச் சுவருக்கு சாரம் போட்டு பச்சை பெயிண்ட் அடிச்சிட்டிருந்தபோது கரண்ட் கம்பியைத் தொட்டு இழுத்துட்டேன். சுவர் ஈரமாய் இருந்ததாலோ என்னவோ என் கையில் ஷாக் அடிச்சிருச்சு. அந்த அதிர்ச்சியிலே சாரத்திலிருந்து நழுவிக் கீழே விழுந்துட்டேன். நீங்க தான் என்னை ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போயி உயிரைக் காப்பாத்தினீங்க. அதை என்னாலே மறக்க முடியுமா’’ என்றார் சரவணன்.

சரவணனின் நன்றி மறவாத நல்ல பண்பை மதித்த ராஜ்மோகன் அவரிடம் ,

‘‘சரவணன் அண்ணே! இப்ப எதுக்கு டாக்டரைப் பார்க்க வந்திருக்கீங்க? உடம்பு சரியில்லியா’’ என்று கேட்டான். அதற்கு சரவணன் ‘‘தம்பி ராஜ்மோகன்! எனக்கு ஒரு வாரமா தீராத வயிற்றுவலி இருக்குது. அதுதான் டாக்டர்கிட்டே வந்தேன் என்று சொல்லிவிட்டு, சரிப்பா நீ எதுக்கு இங்கே வந்திருக்கே என்று கேட்டார்’’ சரவணன்.

‘‘சரவணன் அண்ணே! எனக்கு கடந்த ரெண்டு நாளா லேசான தலைசுற்றல். அதுதான் டாக்டரைப் பார்க்க வந்தேன்’’ என்றான் ராஜ்மோகன்.

அதற்கு சரவணன், ‘‘தம்பி! நம்ம சுந்தரம் டாக்டர் தான் கைராசிக்காரர் ஆச்சே. கவலையை விடுப்பா. எல்லாம் சரியாயிரும்.’’ என்று சொன்ன அவர்

தொடர்ந்து ‘‘தம்பி ராஜ்மோகன், படிக்கிற காலத்திலேயே ஊர் மக்களுக்கு உதவிகளை ஓடோடி செஞ்சே. இப்ப வேலைக்கு வந்திருப்பே. என்ன வேலை பார்க்கிறே’’ என்று கேட்டார் சரவணன்.

‘‘சரவணன் அண்ணே! நான் இப்ப கிராம நிர்வாக அலுவலர் வேலையில் இருக்கேன். எனக்கு இந்த வேலை ரொம்பவும் மனசுக்குப் பிடிச்சிருக்கு. ஓய்வு நேரத்திலேயும் லீவு நாட்களிலேயும் நண்பர்கள் மூலமோ உதவி தேவைப்படற மக்களுக்கு உதவி செய்யறேன். அதிலே ரத்த தானமும் உண்டு’’ என்றான் ராஜ்மோகன்.

அதற்கு சரவணன் ‘‘தம்பி ராஜ்மோகன்! மக்கள் சேவையே மகத்தான சேவை. தொடர்ந்து செய். எனது பாராட்டுக்கள்.

சரி, தம்பி நேரமாச்சு. நம்ம டோக்கன் நம்பரைக் கூப்பிடற நேரமாச்சு வா உள்ளே போவோம் என்று ராஜ்மோகனை அழைத்துச் சென்றார் சரவணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *