சிறுகதை

பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா – ராஜா செல்லமுத்து

பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்ற செய்தி கேட்டதும் சுதாகருக்கு தூக்கி வாரிப் போட்டது. திரைப்படங்களில் வருவதைப் போல பொண்டாட்டி ஊருக்கு போய் விட்டால் நண்பர்களைக் கூட்டி வந்து வீட்டில் தண்ணி அடிப்பது. பலான பெண்களை கூட்டி வந்து கும்மாளமிடுவது .அலுவலகத்திற்கு விடுமுறை பாேட்டு விட்டு சுதந்திரமாகப் பகல் வேளைகளில் கூட படுத்துத் தூங்குவது என்பதெல்லாம் சுதாகருக்கு இல்லை .

அவன் மனைவி மாலினி ஊருக்கு போகப் பாேகிறாள் என்றதும் சுதாகரின் அடிவயிறு கிள்ளியது.

இனி, அவனின் பாடு திண்டாட்டம் தான். அலுவலகத்திற்கு கிளம்பும் முன்னே எழுந்து காபி போடுவது , காலை டிபன், மதியம் லஞ்ச் தயார் செய்து கொடுப்பது . சுதாகரின் சட்டை பேண்ட்டை அயர்ன் செய்து கொடுப்பது. சில வேளைகளில் சுதாகரின் ஷூவுக்கு பாலிஷ் போட்டு கூட கொடுப்பது மாலினியாகத்தான் இருப்பாள்.

கூடவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, அவர்களுக்கு உண்டான மதிய உணவைத் தயார் செய்து கொடுப்பது என்று அத்தனை வேலைகளையும் செய்து விட்டு தான் அயர்வாள் மாலினி.

இன்று பொண்டாட்டி ஊருக்கு போய்விட்டாள் என்று தெரிந்ததும் சுதாகருக்கு உதறலெடுத்தது.

அவள் மட்டும் தான் ஊருக்கு போகிறாள்.வீட்டில் இருக்கும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது. பள்ளி முடிந்தவுடன் கூப்பிட்டு வருவது என்ற செய்தியைக் கேட்டதும் அவனுக்கு மலைப்பாக இருந்தது.

மாலினி வருவதற்கு எப்படியும் இரண்டு மூன்று நாட்களாகும் என்று தெரிந்ததும் சுதாகருக்கு இருப்புக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

நீ கட்டாயம் ஊருக்குத்தான் போகனுமா ?என்று மனைவியிடம் கேட்டபோது

கண்டிப்பா போய் தான் ஆகணும். அப்பா கீழ விழுந்து கால்ல கொஞ்சம் காயம் .அதோட வயது முதிர்ச்சி அம்மாவையும் பாக்கணும்.ஹாஸ்பிடல் அங்க இங்கேன்னு அம்மாவால கூப்பிட்டு போக முடியாது .நான் போனா தான் ரெண்டு மூணு நாள் இருந்து ஹாஸ்பிடல்ல என்ன ஏதுன்னு பார்த்துட்டு நான் திரும்ப வரமுடியும்.

உங்களுக்கு தான் தெரியுமே? என்ன விட்டா எங்க அப்பா அம்மாவுக்கு வேற ஆள் இல்லைன்னு.

அதனால குழந்தைகள ஸ்கூல லீவ் போட முடியாது. எக்ஸாம் வேற வருது . அதனால நீங்க குழந்தைங்கள பாத்துக்கோங்க நான் போயிட்டு வந்துடறேன் என்று மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டிருந்தாள் மாலினி.

இது என்னால சரிப்பட்டு வராது ஆபீஸ் கிளம்பறதா பிள்ளைகளை பார்க்கிறதா ? முடியாது என்றான் சுதாகர் .

இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க .நான் போனா தானே எல்லாமே நடக்கும் என்று மாலினி சொன்னதும் சரி என்று அரைகுறை மனதோடு ஒப்புக்கொண்டான் சுதாகர் .

அன்று இரவு தன் தந்தையிருக்கும் ஊருக்கு பயணமானாள் மாலினி. மறுநாள் சுதாகரின் காலை இருளிலேயே முடிந்தது.

அதாவது 5 மணிக்கே எழுந்தான். குழந்தைகளுக்கு டிபன் செய்வது. மதிய உணவு தயார் செய்வதென்று வேலையில் இறங்கினான் .ஏழு மணிக்கெல்லாம் பிள்ளைகள் செல்லும் பஸ் வந்துவிடும் அவர்களை ஏற்றிவிட்டு பின் தானும் அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு உள்ளானான் சுதாகர் .

எப்போதும் 8 மணி வரை தூங்கிக் கிடக்கும் சுதாகருக்கு முதல் நாள் எழுந்தது என்னவோ போலானது . எப்படித்தான் இந்த பெண்கள் காலையிலிருந்து வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான அத்தனை பணிவிடைகளும் செய்து விட்டு மறுபடியும் எப்படி வேலை செய்து கொண்டிருக்கிறார்களோ ? என்ற எண்ணம் சுதாகருக்கு தோன்றியது.

மாலினி தன் தகப்பன் வீட்டில் இருந்த மூன்று நாட்களும் ஆயிரம் முறைக்கு மேல் போன் செய்து கேட்டிருப்பாள்.

மூன்று நாட்கள் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்தாள். அதுவரையில் மனைவியின் மீது தவறான அபிப்பிராயம் வைத்திருந்த சுதாகருக்கு அன்று முதல் அவள் மீது மரியாதை கூடியிருந்தது. என்னவென்று சொல்லாத அந்த இனம் புரியாத அன்பில் திளைத்துப் போய் இருந்தாள் மாலினி.

ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் தன் கணவன் மாறுவான் என்று அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை தான்.

இப்போதெல்லாம் 5 மணிக்கே எழுந்து மாலினிக்கு ஒத்தாசையாக இருக்கிறான் சுதாகர் .

அவனின் அகராதியில் மற்ற ஆண்களைப் போல் இல்லாமல் பொண்டாட்டி ஊருக்கு போய் விட்டாள் என்ற வார்த்தை பெண்களின் புனிதத்தை ஆண்கள் அறிந்து கொள்வதற்காக விடப்பட்ட சவால் என்று அவனுக்கு தோன்றியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *