செய்திகள்

பேரறிவாளன் விடுதலை: ஜனாதிபதிக்கே என இந்திய அரசு மனு தாக்கல்

அரசியல் சட்ட முரண் ஏற்படும் என பேரறிவாளன் தரப்பு வாதம்

டெல்லி, மே 14–

பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் இந்திய ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று எழுத்துபூர்வமான அறிக்கையைத் தாக்கல் செய்தது.

தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில் தன்னை விடுவிக்க வேண்டும் என்று பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை நீதிமன்றமே ஏன் விடுவிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்திய அரசு வாதம்

இந்நிலையில் இவ்வழக்கின் இறுதி வாதங்களை எழுத்துப்பூர்வமாக ஒன்றிய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்தார். அதில், “மரண தண்டனை பெற்ற பேரறிவாளனின் கருணை மனு மீது முடிவெடுக்கக் காலம் தாழ்த்தப்பட்டது என்ற காரணத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் அவருக்கு தண்டனை குறைப்பு செய்தது. கடந்த மார்ச் 9ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே அவருக்கு வேறு எந்த நிவாரணமும் வழங்கக் கூடாது.

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் மட்டுமே முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது. குற்றத்தின் தீவிரத்தன்மை, ஆதாரங்களைக் கவனத்தில் கொள்ளாமல் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. பேரறிவாளன் ஐபிசி 302ன் கீழ் தண்டனை பெற்றாலும் இவ்வழக்கை மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு தான் விசாரித்தது. எனவே மாநில அரசு இவ்விவகாரத்தில் முடிவெடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரறிவாளன் தரப்பு வாதம்

அதுபோன்று பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அமைச்சரவையின் தீர்மானத்தைக் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க ஆளுநர் அனுப்பியது அரசியல் சாசனத்திற்கு முரணானது. இந்த விவகாரத்தில் ஆளுநர் அமைச்சரவை முடிவுக்குக் கட்டுப்பட்டவர். அப்படி இருக்கும்போது ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்பட முடியாது.

ஐபிசி 302ன் கீழ் தண்டனைப் பெற்றவர்களின் விவகாரத்தில் முடிவெடுக்கக் குடியரசு தலைவருக்குத் தான் அதிகாரம் என்ற ஒன்றிய அரசின் வாதத்தை ஏற்றால், அது ஏற்கனவே சட்டப்பிரிவு 161ன் கீழ் ஆளுநர் அளித்த மன்னிப்பு, தண்டனை குறைப்பு ஆகியவை அரசியல் சாசனத்துக்கு முரணானதாகிவிடும். எனவே, உச்ச நீதிமன்றம் தனக்கு இருக்கும் அதிகாரமான 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி 29 ஆண்டுகள் சிறையிலிருந்த ராம் சேவக், 28 ஆண்டுகள் சிறையிலிருந்த ஷோர், 16 ஆண்டுகள் சிறையிலிருந்த சதீஷ், 17 ஆண்டுகள் சிறையிலிருந்த நிலோபர் நிஷா ஆகியோரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.