செய்திகள்

புதிய நாடாளுமன்றக் கட்டடம்: பிரதமர் மோடி திடீர் ஆய்வு

டெல்லி, செப். 27–

அமெரிக்காவில் இருந்து டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, நேற்று இரவு புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் இடத்தைப் பார்வையிட்டார்.

மூன்று நாள் அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜேபி.நட்டா ஆகியோரை சந்தித்தார். அதைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணிகள் நடக்கும் இடத்துக்கு நேற்று இரவு 8.45 மணிக்கு, வெள்ளை குர்தா – சுரிதார் அணிந்து ஹெல்மெட்டோடு வந்தார் மோடி.

கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலவரத்தை அதிகாரிகள் பிரதமரிடம் விளக்கினார்கள். அதேபோல கட்டுமானத் தொழிலாளர்களையும் சந்தித்த பிரதமர் மோடி, அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்தார்.

முதல்முறை வருகை

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதிய நாடாளுமன்றத்திற்கான அடிக்கல் நாட்டினார் பிரதமர். அதன்பின், புதிய நாடாளுமன்றக் கட்டடத் தளத்துக்கு, பிரதமரின் முதல் வருகை இதுவாகும். வரும் 2022 ஜனவரி 26ஆம் தேதிக்குள் இந்தக் கட்டடப் பணிகள் முடியும் என்று கடந்த வாரம் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் பூரி தெரிவித்த நிலையில்தான் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார் மோடி.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் 64,500 சதுரமீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான லவுஞ்ச், நூலகம், பல கமிட்டி அறைகள், உணவு உண்ணும் பகுதிகள் மற்றும் போதுமான பார்க்கிங் இடம் ஆகியவற்றோடு, ஒரு பிரமாண்டமான அரசியலமைப்பு மண்டபமும் இதில் இருக்கும். புதிய கட்டடத்தில் உள்ள லோக்சபா அறை 888 உறுப்பினர்களைக் கொண்ட இருக்கை வசதியையும், ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு 384 இடங்களையும் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *