போஸ்டர் செய்தி

புதிய தொழில்நுட்பத்துடன் ‘இ–பாஸ்போர்ட்’: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு

புதுடெல்லி,ஜூன்.25–

பாஸ்போர்ட்டுகளில் புதிய தொழில்நுட்பத்தை இணைக்கும் ‘இ-பாஸ்போர்ட்’ விரைவில் நடைமுறைக்கு வரும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றி தனித்தன்மையுடன் வெற்றிப் பெற்று மத்தியில்ஆட்சியை மீண்டும் பிடித்தது. வெற்றிப் பெற்ற பா.ஜ.க. கூட்டணி மத்திய அமைச்சர்களை நியமித்தது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று ‘பாஸ்போர்ட் சேவா திவாஸ்’ எனும் விழாவில் கலந்துக் கொண்டார். இந்த விழாவில் சிலருக்கு விருதுகளும் வழங்கினார். அமைச்சர் பொறுப்பு ஏற்று முதன்முறையாக இவ்விழாவில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–

பாஸ்போர்ட்டுகளில் பாதுகாப்பு கருதி புதிய வசதிகளை இணைக்க மத்திய அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பாஸ்போர்ட்டில் சிப் ஒன்றை பொருத்த திட்டமிட்டுள்ளோம். விரைவில் இந்த சிப் பொருத்திய புதிய ‘இ-பாஸ்போர்ட்’ நடைமுறைக்கு வரும். மேலும் ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் இருக்கும்.

தற்போது ஆண்டிற்கு 1 கோடி பாஸ்போர்ட்டுகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, குறிப்பிட்ட இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் விரைவில் தொடங்கும். கடந்த 5 ஆண்டுகளில் பாஸ்போர்ட்டுகளுக்கான மத்திய அரசின் சேவை மிகப்பெரிய மாற்றத்தினை கொண்டு வந்தது. நல்ல அரசினை உருவாக்குவதே எங்கள் உயரிய நோக்கம் ஆகும். மேலும் மக்களுக்கு வெளிப்படையான மற்றும் உதவக்கூடிய வகையில் தகுந்த நேரத்தில் சேவை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *