போஸ்டர் செய்தி

பிரதமர் மோடிக்கு அமீரக அரசின் உயரிய விருது வழங்கப்பட்டது

Spread the love

அபுதாபி, ஆக.25-

2 நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருதை அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் வழங்கினார்.

ஐக்கிய அரபு அமீரகம் – இந்தியா நாடுகளுக்கு இடையே வரலாற்று சிறப்புமிக்க உறவுகளை மேம்படுத்தி வரும் பிரதமர் மோடியை கவுரவப்படுத்தும் வகையிலும், அவரது முயற்சிகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், அவருக்கு அமீரகத்தின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் ஜாயித்’ விருது கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்காக அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக அமீரகம் வந்தார்.

அபுதாபியில் உள்ள அதிபர் அரண்மனையில் நேற்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடிக்கு ஆர்டர் ஆப் ஜாயித் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் வழங்கினார். அமீரக நிறுவன தந்தை ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யானின் பெயரில் வழங்கப்படும் இந்த விருது, அவரது பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி மோடிக்கு வழங்கப்பட்டு உள்ளது.

விருதை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, அங்கு இருந்த குறிப்பேட்டில் தனது கருத்துகளை பதிவு செய்தார். அதில், “எனக்கு வழங்கப்பட்ட ‘ஜாயித்’ விருது தனி நபருக்கு வழங்கப்பட்டது அல்ல. 130 கோடி இந்தியர்கள் வசிக்கும் ஒட்டு மொத்த தேசத்திற்கும் வழங்கப்பட்ட கவுரவம் ஆகும்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்த விருதை வழங்கியமைக்காக அமீரகத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக தனது டுவிட்டர் தளத்திலும் மோடி கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *