செய்திகள்

பிரதமரை தரக்குறைவாகப் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

திருப்பூர், ஏப்.2-

அண்ணா தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் நேற்று திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

காங்கேயம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மு.பெ.சாமிநாதனை ஆதரித்து ஈரோடு மாவட்டம் சென்னிமலை பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பழைய ஆயிரம் ரூபாய் நோட்டை பொதுமக்களிடம் காண்பித்து, இது பழைய ஆயிரம் ரூபாய் நோட்டு, இதை நான் ஏன் தெரியுமா வச்சிருக்கேன். இதை பார்க்கும்போதெல்லாம் மோடி மேல கொலை வெறி வரும் என்று கலவரத்தை தூண்டும் வகையில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கொலைமிரட்டல் விடுக்கும் தொனியிலும், பிரதமரின் கண்ணியத்தை கெடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

மேலும் தடை செய்யப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டையும் வைத்திருப்பது குற்றமாகும். அவர் பேசியது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. பிரதமரை ஒருமையில் தரக்குறைவாக பேசி அவர் மீது கொலைவெறியில் இருப்பது மிகுந்த அச்சத்தையும், பதற்றத்தையும் பொதுமக்கள் மத்தியில் விளைவிப்பதால் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *