சென்னை, மார்ச் 4–
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி ஏமாற்றியதாக, தலைமைச் செயலக அலுவலர் ரவி மீது ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் புகார் அளித்துள்ளார். அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, ரவி தன்னிடம் ரூ. 11 லட்சம் பணம் வாங்கிக்கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.
2 பேர் கைது
அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், ரவியை கைது செய்துள்ளார். மேலும் இதில் தரகராக செயல்பட்ட விஜய் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ரவி, அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ரவி, இதுவரை எத்தனை பேரிடம் வேலை வாங்கித் தருவதாக, டிரான்ஸ்பர் வாங்கித் தருவதாக மோசடி செய்துள்ளார் என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.