சிறுகதை

பங்களா | ராஜா செல்லமுத்து

சுனாமிக்கு முன்னால் ரொம்பவே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த கடற்கரை குடியிருப்புகள் இப்போது காற்றாடிக் கிடக்கின்றன.

பெரிய பெரிய அலைகள் கடலில் எழும்பினால் கூட அது சுனாமி என்று அச்சப்படும் அளவிற்கு மக்கள் மனதில் நிரந்தரமாகத் தங்கி விட்டது அந்த சுனாமியின் சுவடுகள்.

இப்போதெல்லாம் கடற்கரை குடியிருப்புகளில் அதிக மனிதர்கள் வாழ்வதில்லை. அதை ஒரு பொழுதுபோக்காகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எப்போதாவது அங்கு போவது கேளிக்கை நிகழ்ச்சிகளுக்காக கடற்கரை வீடுகளை பயன்படுத்துவது என்று அந்த ஆடம்பர பங்களாக்கள் ஆளில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

பெரிய பெரிய இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட அந்த பங்களாக்களில் ஒரு சில மனிதர்கள் கூட இல்லாமல் வெறுமனே அதை பூட்டி வைத்துவிட்டு காவல்காரர்கள் காவலுக்கு வைத்துவிட்டு எனக்கும் கடற்கரையில் வீடு இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளும் பெரிய மனிதர்கள்தான் பெரிய பெரிய நகரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .

அந்த வகையில் டேனியல் தங்கத்திற்கு கடற்கரையில் ஒரு பெரிய பங்களா. அலைகளின் சுவடுகள் நுரை தள்ளிக் கொண்டு வாசலில் வந்து கோலம் போடும் தூரத்தில்தான் டேனியல் தங்கத்தின் வீடு. விரிந்து பரந்த அந்த பங்களாவில் குடியிருக்கும் ஆட்களே கிடையாது. காவல்காரன் மட்டுமே அந்த வீட்டில் உண்டு. டேனியல் தங்கம் நகரத்திற்குள் குடியிருக்கிறார்.

பங்களா கடற்கரையில் குடியிருக்கிறோம்; எப்போதாவது பங்களாவிற்கு சென்று வருவோம் என்பதுதான் டேனியல் தங்கத்தின் வழக்கம்.

டேனியல் தங்கமும் அவர்கள் குடும்பமும் சுனாமி பயத்தில் அந்தக் கடற்கரை பங்களாவை விட்டு வெளியேறியவர்கள் தான்.

இதுவரையிலும் அந்தப் பங்களாவில் இன்னும் கால் பதிக்கவில்லை. அந்த விரிந்து பரந்த பங்களாவிற்கு நல்லதம்பி என்பவர்தான் காவலாளி. அவரின் கட்டுப்பாட்டில் தான் அந்த பங்களா இருக்கிறது. இரவு பகல் என்று அந்த பங்களாவின் ஊழியராக அந்த பங்களாவின் முதலாளியாக அந்த பங்களாவின் குடியிருப்பவராக இருப்பது நல்ல தம்பி மட்டும்தான். இப்படியாக போய்க் கொண்டிருக்கும் நாட்களில் நல்லதம்பி சில விஷயங்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்.

நட்சத்திரங்கள் பூத்துக் கிடக்கும் ஒரு நடுநிசியில் துருதுருவென்று சத்தமிட்டபடியே டேனியல் தங்கத்தின் வீட்டிற்கு முன்னால் ஒரு ஆட்டோ வந்து நின்றது.

“எரிந்துகொண்டிருந்த ஆட்டோ முன் விளக்குகள் அணைந்தன. ஆட்டோவின் உள்ளிருந்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இறங்கினார்கள் . அவர்கள் இறங்குவதற்கும் நல்ல தம்பியின் கைபேசி அடிப்பதற்கும் சரியாக இருந்தது.

நல்லதம்பி போனை எடுத்து பேசினான்.

சரி பாத்துக்குறேன். 2434 அந்த ஆட்டோ தானே .

ஆமா

ரைட் வந்துட்டாங்க. நான் பார்த்துக்கிறேன் என்று யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் நல்லதம்பி. அவர்கள் ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி நேரே தங்கத்தின் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

அவர்களை நல்லதம்பி ரொம்பவே கரிசனையாக அழைத்துச் சென்றார். வீட்டின் உள்ளே இருக்கும் கீழ்த்தளத்தில் இருக்கும் படுக்கையில் அவர்களை படுக்க அனுமதித்தார் .

இந்த வீட்ல நீங்க எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் போகலாம் ஆனா மேல மட்டும் போகக்கூடாது .இப்போ மணி இரவு 12. நாலு மணி வரைக்கும் தான் உங்களுக்கு இங்க அனுமதி . நாலு மணிக்கு மேல நீங்க கிளம்பி வரணும். இந்தப் பக்கமா வாக்கிங் போற ஆட்கள் எழுந்து விடுவார்கள். அதனால நாலு மணிக்கே நீங்க வீட்டை விட்டு கிளம்பி விடுங்கள் என்று கட்டளைக் குரலை எழுப்பினார் நல்லதம்பி.

சரி சரி என்று சொன்ன அந்த ஜோடி, நல்ல தம்பியின் கையில் கொஞ்சம் பணத்தைத் திணித்தது. பணத்தை வாங்கிக் கொண்ட நல்லதம்பி அவர்களை உள்ளே அனுமதித்து விட்டு வெளியே காவலுக்கு நின்று கொண்டிருந்தார்.

இரவு 12 மணிக்கு போன அந்த ஜோடி சரியாக நாலு மணிக்கு வெளியேறியது. அவர்களை வீட்டை விட்டு அப்புறப்படுத்தி வீட்டின் உள்ளே நுழைந்து பொருட்கள் சரியாக இருக்கிறதா என்று பார்த்தார். படுக்கை கலைந்து கிடப்பதை சரியாக போட்டுவிட்டு அந்த இடத்தையும் தண்ணீரால் சுத்தம் செய்து விட்டு எப்போதும் போல தன் காவல் வேலையைச் செய்து கொண்டிருந்தார் நல்லதம்பி.

மறுநாள் இரவும் இதே போல ஒரு ஜோடி வந்தது . அவர்களுக்கும் அதே கட்டளைகளை எழுப்பிவிட்டு வெளியே காவல் காத்தார் நல்லதம்பி. அவர்களும் போகும் போது நல்லதம்பியின் கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து விட்டு போனார்கள்.

ஆனால் மொத்த பணம் வேறு ஒரு நபரிடம் இருந்து வசூலித்துக் கொள்வார் நல்லதம்பி.

இவர்கள் கொடுப்பது நல்லதம்பிக்கு டிப்ஸ்.

இன்னொரு நாளும் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு ஒருவன் டேனியல் தங்கத்தின் வீட்டிற்குள் நுழைந்தான்.

நல்ல தம்பியும் அவர்களுக்கு படுக்கையை காட்டி விட்டு வெளியே காவலுக்கு நின்றார்.

ஆனால்…..

அந்த ஜோடிக்கு தகராறு ஏற்பட்டு அந்த பெண்ணை கொலை செய்து இருந்தான் உடன் வந்தவன்.

நல்லதம்பிக்கு இது பெரிய தலைவலி ஆகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்ற நல்லதம்பி அந்த ஜோடியை அனுப்பிய நபரிடம் பேசினார்.

அவரோ பயப்பட வேண்டாம் . தான் இருப்பதாகச் சொல்லி அந்த நபர் சிறிது நேரத்தில் காரை அனுப்பி கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் உடலை அப்புறப்படுத்தினார்.

அதிலிருந்து நல்லதம்பிக்கு பயம் பிடித்துக் கொண்டது.

இனிமேல் இனி ஒரு முறைகூட இந்தத் தவற்றை செய்யக்கூடாது.

டேனியல் தங்கம் நமக்கு நல்ல சம்பளம் தருகிறார். நம்மை நல்லமுறையில் பார்த்துக் கொள்கிறார். தீபாவளி பொங்கல் என்று போனஸ் தருகிறார். அவருடைய வீட்டை பார்ப்பதற்குத்தான் நமக்கு அனுமதி தந்திருக்கிறார்.

தவிர அவர் வீட்டை தவறாக பயன்படுத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதை ஒரு தவறான விடுதியாக மாற்றி பணம் சம்பாதிக்க அல்ல. அப்படிப் பணம் சம்பாதித்துக் கொண்டு இருப்பதை நினைத்து ரொம்பவே வெட்கப்பட்டார் நல்லதம்பி.

நடந்த கொலையில் தனக்கும் பங்கு இருக்குமோ என்று தினமும் பயத்தில் கற்பனையில் துடித்துக் கொண்டிருந்த நல்ல தம்பிக்கு அந்தக் கொலையைப் பற்றிய எந்த விவரமும் அவருக்கு வந்து சேரவில்லை.

அதனால் இனி ஒரு முறை அந்தத் தவற்றை செய்வதில்லை என்று முடிவெடுத்த நல்லதம்பி வீட்டின் முகப்பில் இருக்கும் சிசிடிவி கேமராக்களைக் கூட அவர் டெக்னிக்கலாக அணைத்து வைத்துவிடுவார்.

இத்தனையும் செய்த நல்ல தம்பிக்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டது. அதுமுதல் அந்தக் கடற்கரையை வீட்டை ஒரு ஆலயமாக பாவித்துக் கொண்டார் . இனி மேல் எந்த தவறும் செய்யக்கூடாது என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்ட நல்லதம்பி.

தங்கம் அவர்கள் கட்டி வைத்திருந்த பங்களாவை போல் அந்த கடற்கரை முழுவதும் இருக்கும் பங்களாக்களில் இதுபோலவே நடக்கும் தவறான பழக்க வழக்கங்களை இந்தக் குறையைச் சுட்டிக் காட்டி நிறுத்தினார்.

அவர்களும் இனிமேல் இதுபோல தவறுகளுக்கு பங்களாக்களை பயன்படுத்துவதில்லை என்ற முடிவிற்கு வந்தனர்.

கடற்கரை முழுவதும் அலைகளின் ஓங்காரம் அடித்துக்கொண்டிருந்தது.

நல்ல தம்பி அன்று இரவு தான் நன்றாகத் தூங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *