செய்திகள்

நேற்று ஒரே நாளில் 1,933 பேருக்கு கொரோனா

* தமிழகத்தில் மொத்த பாதிப்பு 40,698

* சென்னையில் மட்டும் 28,924

நேற்று ஒரே நாளில் 1,933 பேருக்கு கொரோனா

97 வயது கிழவர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

 

சென்னை, ஜூன்.13-

தமிழகத்தில் 1,933 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 28 ஆயிரத்து 924 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்து 889 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் 1,186 ஆண்கள், 796 பெண்கள் என மொத்தம் 1,982 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 1,933 பேர் ஏற்கெனவே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். கத்தார், சவுதி அரேபியா, குவைத், டெல்லி, அந்தமான், பஞ்சாப், கேரளா, மகாராஷ் டிரா, தெலங்கானாவில் இருந்து தமிழகம் வந்த 49 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 12 வயதுக்கு உட்பட்ட 96 குழந்தைகளும், 60 வயதுக்கு உட்பட்ட 264 முதியவர்களும் அடங்குவர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் 28 ஆயிரத்து 924 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் 10 பேர், தனியார் மருத்துவமனையில் 8 பேர் என 18 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த 38 வயது ஆண் உட்பட 16 பேரும், திருவள்ளூர், செங்கல்பட்டை சேர்ந்த ஒருவரும் அடங்குவர். இதுவரையில் கொரோனாவுக்கு 367 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,342 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 22 ஆயிரத்து 47 பேர் குணமடைந்து உள்ளனர். இதையடுத்து நேற்றைய நிலவரப்படி சென்னையில் 13,906 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 18 ஆயிரத்து 281 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 6 லட்சத்து 73,906 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

நேற்று சென்னையில் 1,479 பேரும், செங்கல்பட்டில் 128 பேரும், திருவள்ளூரில் 92 பேரும், மதுரையில் 31 பேரும், காஞ்சீபுரத்தில் 26 பேரும், திருவண்ணாமலையில் 22 பேரும், தூத்துக்குடியில் 18 பேரும், கள்ளக்குறிச்சியில் 17 பேரும், விழுப்புரத்தில் 16 பேரும், நெல்லையில் 15 பேரும், சிவகங்கையில் 12 பேரும், கடலூர், நாகப்பட்டினத்தில் தலா 8 பேரும், விருதுநகர், திருச்சி, தஞ்சாவூரில் தலா 7 பேரும், கோவை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருவாரூரில் தலா 6 பேரும், வேலூர், ராமநாதபுரத்தில் தலா 5 பேரும், அரியலூர், ராணிப்பேட்டை, தென்காசியில் தலா 4 பேரும், தேனி, தர்மபுரியில் தலா 3 பேரும், திண்டுக்கல், நாமக்கலில் தலா 2 பேரும், பெரம்பலூர், கரூரில் தலா ஒருவரும் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில்…

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 175 பேரும், வெளி மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 73 பேரும், ரெயில் மூலம் வந்த 309 பேரும், சாலை மார்க்கமாக வந்த 1,476 பேரும், கடல் மார்க்கமாக வந்த 5 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2,097 பேரும் 13 வயது முதல் 60 வயது வரையுள்ளவர்கள் 34,042 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட வர்கள் 4,559 பேரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். நேற்று மட்டும் 98 குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 28,924 பேரும், செங்கல் பட்டில் 2,569 பேரும், திருவள்ளூரில் 1,752 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக உயிரிழப்பு

கொரோனாவுக்கு பலியானவர்கள் பட்டியலில் சென்னையில் 294 பேரும், செங்கல்பட்டில் 22 பேரும், திருவள்ளூரில் 17 பேரும், காஞ்சீபுரத்தில் 6 பேரும், விழுப்புரம், வேலூர், மதுரையில் தலா 3 பேரும், திண்டுக்கல், தேனி, திருவண்ணாமலை, தூத்துக்குடியில் தலா 2 பேரும், திருச்சி, நெல்லை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, நாமக்கல், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, ஈரோடு, கடலூர், கோவை மற்றும் விமான கண்காணிப்பு முகாமில் ஒருவரும் இறந்துள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரசை வென்ற 97 வயது முதியவர்

சென்னையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 97 வயதான இவர் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் இருந்ததால் சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. ஏற்கெனவே, இருதய நோய் இருந்ததால் உடல்நிலை மோசமாக இருந்தது. அவருக்கு கூடுதல் ஆக்சிஜன் அளித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். 10 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்த அவர், நலமுடன் வீடு திரும்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *